‘Putting Ourselves to the Test: Achieving Equity to End HIV’ ‘எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்: எய்ட்ஸை ஒழிக்க சமத்துவமாக ஒன்று திரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகின்றது
HIV என்னும் வைரஸ் மூலமே இந்நோய் உருவாகிறது. எச்.ஐ.வி. வைரஸ் உடலினுள் புகுந்து வெண்குருதிக் கலங்களைத் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் எய்ட்ஸ் பீடிக்கப்பட்ட ஒருவர் நோயாளியாகிறார்.
எச்.ஐ.வி. வைரஸ் 3 வழிகளில் ஒருவருக்குக் கடத்தப்படலாம். அவையாவன
1. நோயுற்றவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளுதல்.
2. நோயாளரின் குருதியை மற்றையவருக்கு மாற்றுவதன்மூலம் அல்லது நோயாளி பாவித்த ஊசியை வேறுறொருவருக்கு பயன்படுத்துவதன் மூலம்.
3. நோயுள்ள தாய் தன் கருவிலுள்ள குழந்தைக்குக் கடத்தல்.
புள்ளிவிபர முடிவுகளின்படி உலக சனத்தொகையில் சுமார் 3 கோடி 80 இலட்சம் மக்களுக்கு மேல் எச். ஐ. வி. தொற்றுடன் வாழ்ந்து வருகின்றார்கள். உலகத்தில் தென் ஆபிரிக்காவே அதிகளவில் எச்.ஐ.வி. நோயாளிகளைக் கொண்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன. இலங்கையில் எச்.ஐ.வி உடன் 4000 இற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்
பாலியல் தொழிலாலும் ஓரினச் சேர்க்கையாலும் இலங்கையில் எய்ட்ஸ் நோய் பரவுகின்றது. தற்போது 15, 16, 17 வயது மாணவர்களும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. எதிர்காலங்களில் மாணவர்கள் மத்தியில் அதிகளவு எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகும் அபாயம் தோன்றியுள்ளது எனவும் அதிர்ச்சியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோர் இது விடயத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டப்படுகின்றனர். சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதனால்தான் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோரும் ஆசிரியர்களும் மதவழிபாட்டு போதகர்களும் ஆபாச படங்களை பார்ப்பதிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கான புத்திமதிகளை எடுத்துக் கூறி மாணவர் சமுதாயத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.