பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு பஸ் அன்பளிப்பு
“Sri Lanka First" என்பது எமது கனவு. அதற்காக அர்ப்பணிப்போம் - சஜித்
மத்திய கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு ஐம்பது இலட்சம் பெறுமதியான பாடசாலை பஸ் வண்டியொன்று இன்று (01) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 41 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் பெறுமதியான பாடசாலை பஸ் வண்டியொன்று பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டு உரையாற்றுகையில்
இலங்கையை முன்னிலைக்கு கொண்டு வருவதே தமது நோக்கமாகும் எனவும், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில், இந்நாட்டின் கல்வித்துறையில் பாரிய முற்போக்கு புரட்சிகரமான மாற்றமொன்று ஏற்படுத்த வேண்டும் என தான் நம்புவதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், இந்நாட்டிலுள்ள நாற்பத்து மூன்று இலட்சம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம்,உயிரியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி அறிவியலை வழங்குவதற்கான துரித திட்டம் நடைமுறைப்படுத்துவதாகவும், துரித வேலைத்திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் புதிய தொழில்நுட்ப கற்கையை இந்நாட்டு பாடசாலை கட்டமைப்பிற்குள் வியாபிப்பதாகவும், அந்த பொறுப்பை மற்றவர்களுக்கு வழங்குவதுடன், அதில் தானும் நேரடியாக தலையிடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாரம்பரிய எதிர்க்கட்சியின் வகிபாகத்திற்குப் பதிலாக முற்போக்கு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதாகவும், குறுகிய சட்டகத்திற்கு வெளியே ஒரு புதிய பாரம்பரியத்தை தான் அறிமுகப்படுத்தியதாகவும், மூச்சு மற்றும் பிரபஞ்சம் ஆகிய வேலைத்திட்டங்கள் அதன் விளைவுகள் தான் எனவும் தெரிவித்தார்.
74 வருடங்களாக குறுகிய மனப்பான்மையுடன், பிற்போக்குத்தனமான, பின்நோக்கிய சிந்தனையில் நாட்டை வக்குரோத்தாக்கிய குழுவினரின் கருத்தோட்டம் பற்றி சிந்திக்காமல் உலகத்துடன் போட்டியிட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான திறமையான பிள்ளைகளும் குடிமக்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் எனவும்,இவர்களை நம்பி புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அடிப்படை உரிமைகள் தொடர்பாக தம்மிடம் புதிய விளக்கமொன்றுள்ளதாகவும், இதில் சிவில், அரசியல் மற்றும் மனித உரிமைகள் போன்றன தவிர பொருளாதார, சமூக,மத மற்றும் கலாச்சார உரிமைகள் போன்றனவை தவிரவும் கல்விக்கான உரிமையையும் நாட்டின் அடிப்படை உரிமையாக மாற்றுவதாகவும், அவ்வாறு மாற்றுவதன் பிற்பாடு எந்தப் பாகுபாடுமின்றி ஒவ்வொரு குழந்தையும் சமமான கல்வியைப் பெறக்கூடிய சூழ்நிலை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.