கண்டி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டம் நாளை ஆரம்பம்

கண்டி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பு மருந்தேற்றல் திட்டத்திற்காக கண்டி மாநகர சபை பிரதேசத்தில் ஆறு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. கிராம உத்தியோகத்தர்கள் வாயிலாக உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட நிபுணர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தொடர்ந்து நான்கு நாட்கள் முன்னெடுக்கப்படும். இம்முறை கண்டி மாநகர சபை, பஸ்பாகே-கோரளை, பாத்த-தும்பர ஆகிய சுகாதார மருத்துவ உத்தியோத்தர் பிரிவுகளில் தடுப்பு மருந்தேற்றல் இடம்பெறும். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முதற்கட்ட தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் குண்டசாலை, மெனிக்ஹின்ன சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகளிலும், கண்டி மாநகரில் தொற்று அபாயம் தீவிரமாகவுளள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஸ்புட்னிக்-வீ தடுப்பூசி ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.