இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01. இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் இந்தியாவின் வேலூர் கிறீஸ்தவ மருத்துவ கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
சீமாட்டி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் என்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை (Bone Marrow transplant) வேலைத்திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான பணிக்குழாமினரைப் பயிற்றுவித்தல் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் வேலூர் கிறீஸ்தவ மருத்துவ கல்லூரியின் ஒத்துழைப்புக் கிடைத்துள்ளது.
தற்போது சீமாட்டி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் என்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தாபிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பணிகளை பயனுறு வகையில் மேற்கொண்டு செல்வதற்காக ஒழுங்குமுறையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சித்துறைகளில் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு குறித்த மருத்துவக் கல்ல}ரி உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சுகாதார அமைச்சு மற்றும் இந்தியாவின் வேலூர் கிறீஸ்தவ மருத்துவ கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. சமுதாய மத்தியஸ்த சபை மற்றும் விசேட காணி மத்தியஸ்த சபைகளில் மத்தியஸ்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்காக ஆசிய மன்றத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளல்
இலங்கையின் மத்தியஸ்தம் தொடர்பான வேலைத்திட்டத்தின் ஆரம்பம் தொடக்கம் ஆசியா மன்றம் சமுதாய மத்தியஸ்த சபை மற்றும் விசேட காணி மத்தியஸ்த சபைகளில் மத்தியஸ்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்லல் மற்றும் வலுப்படுத்தலுக்காக தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த பணிகளை மேற்கொள்வதற்காக 127 மில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்குவதற்கு ஆசியா மன்றம் உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. இலங்கை பொது மருத்துவ வாண்மையாளர் கல்லூரிக்கு (Ceylon College of Physicians) காணியொன்று வழங்கல்
இலங்கை மருத்துவ வாண்மையாளர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 1974 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை பொது மருத்துவ வாண்மையாளர் கல்லூரி தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த கல்லூரிக்கான புதிய அலுவலகக் கட்டிடத்தொகுதியொன்றை அமைத்து பேணிச் செல்வதற்காக காணித்துண்டொன்றை ஒதுக்கி வழங்குமாறு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரச காணியில் 21.30 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை இலங்கை பொது மருத்துவ வாண்மையாளர் கல்லூரிக்கு விடுவிப்பு வழங்கல் பத்திரத்தின் மூலம் வழங்குவதற்காக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 2022 – 2030 காலப்பகுதிக்கான தேசிய சுற்றாடல் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
தேசிய சுற்றாடல் கொள்கைக்காக 2022.06.20 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தேசிய கொள்கைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்புடையதாகவும் மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டில் சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற சவால்களைப் பற்றியும் கவனம் செலுத்தி குறித்த அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொண்டு சுற்றாடல் அமைச்சு 2022-2030 காலப்பகுதிக்கான தேசிய சுற்றாடல் செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்துள்ளது.
குறித்த செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதற்காக தேசிய மட்டத்தில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளவும் மற்றும் நெறிப்படுத்தல்களுக்காக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமைத்துவத்தில் ஒருங்கிணைந்த சுற்றாடல் மற்றும் அபிவிருத்திக் கொள்கைகள் தொடர்பான குழுவை தாபிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. இலங்கை கடற்படை சமுத்திரவியல் நீர்நில ஆய்வு சேவைகளை (Hydrological Service) தேசிய மட்டத்தில் மேற்கொண்டு செல்வதற்கான சட்டரீதியான அதிகாரங்களை வழங்கல்
இலங்கையின் உள்ளூர் கடல் எல்லை மற்றும் தனித்துவ பொருளாதார வலய சமுத்திரவியல் நீர்நில நடவடிக்கைகள் கடற்படைக்குரிய கடமையல்லாத விடயமாக இலங்கை கடற்படைக்கு ஒப்படைப்பதற்கான யோசனை 2022.09.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த யோசனை தொடர்பாக மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அவர்களின் தலைமையிலான உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த உபகுழுவின் பரிந்துரைக்கமைய இலங்கையில் உள்ளுர் கடல் எல்லை தனித்துவ பொருளாதார வலயத்தில் சமுத்திரவியல் நீர்நில ஆய்வு நடவடிக்கைகளை கடற்படைக்குரிய கடமையல்லாத விடயமாக இலங்கை கடற்படைக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒப்படைப்பதற்கும், இவ்விடயதானம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றக் கூடிய வகையில் தேசிய சமுத்திரவியல் நீர்நில ஆய்வு அலுவலகத்தை (National Office of Hydrological Service) தாபிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டத் திருத்தம் செய்தல்
மத்தியஸ்த சபை ஆணைக்குழு அங்கத்தவர்களை நியமித்தல், மத்தியஸ்த சபை அதிகார இடப்பரப்பை தீர்மானித்தல் மற்றும் தீர்க்க முடியாத பிணக்குகள் மற்றும் அவ்வாறான பிணக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்தல் போன்ற பணிகளுக்கமைவான ஏற்பாடுகளை சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் அறிமுகப்படுத்துவதற்காக 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2022.09.22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. மத்தியஸ்தம் (சிவில் மற்றும் வர்த்தகப் பிணக்குகள் தீர்வுகாணல்) சட்டமூலம்
வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான நிலையமொன்றை தாபிப்பதற்காக 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பினும், பல்வேறுபட்ட தொழிநுட்பப் பிரச்சினைகள் மற்றும் ஒருசில மட்டுப்பாடுகளால் குறித்த சட்டத்தால் எதிர்பார்க்கப்படுகின்ற பணிகள் நிறைவேற்றுவதற்கு இயலாமல் உள்ளது.
சமகாலப் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தன்னார்வ மத்தியஸ்த முறையைப் பல நாடுகள் கடைப்பிடித்து வருவதுடன், அந்நாடுகள் தன்னார்வ மத்தியஸ்தம் (Voluntary Mediation) தொடர்பான சட்டம் ஒழுங்குகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அத்துடன், தன்னார்வ மத்தியஸ்தத்தை நியாயமான காரணங் காட்டாமல் நிராகரிக்கின்ற தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும் குறித்த நாடுகள் தேவையான சட்ட வகுப்புக்களை மேற்கொண்டுள்ளன. மேற்குறித்த சர்வதேச போக்குகள் பற்றிக் கவனம் செலுத்தி தன்னார்வ மத்தியஸ்த (Voluntary Mediation) தலையீடுகளை ஊக்குவிப்பதற்காக எமது நாட்டு நீதித்துறைக்குப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய சட்டத்தை முடிவுறுத்துவதற்கும், சிவில் மற்றும் வர்த்தகப் பிணக்குகளுக்கான தன்னார்வ இசைவுத்தீர்ப்பு தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்கும் மற்றும் அதற்குரிய விளைவாய்ந்த தன்மையுடைய விடயங்கள் தொடர்பாக ஏற்பாடுகளை வகுப்பதற்காகவும் மத்தியஸ்தம் (சிவில் மற்றும் வர்த்தகப் பிணக்குகள் தீர்வு) சட்டமூலத்தை தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்தை தயாரித்தல்
பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான அடிப்படைச் சட்டமூலம் 2022.10.31 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அடிப்படைச் சட்டமூலம் பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கருத்துக்களைக் கேட்டறிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கௌரவ பிரதமர் அவர்கள் கட்சித் தலைவர்களுடன் குறித்த அடிப்படைச் சட்டமூலம் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அதில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
09. அவுஸ்திரேலிய தன்னார்வ ஒத்துழைப்புக்கள் வேலைத்திட்டம் 2022-2027
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அவுஸ்திரேலிய தன்னார்வ ஒத்துழைப்புக்கள் வேலைத்திட்டம் 26 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளூர் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக பங்காள அமைப்புக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையில் 2017 ஆம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தத்தின் காலப்பகுதி தற்போது முடிவடைந்துள்ளமையால், குறித்த வேலைத்திட்டத்தை மேலும் 05 வருடங்களுக்கு எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்காக இணைப்பு உடன்பாட்டு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. இலங்கை மற்றும் மாலைதீவுக்கும் இடையிலான குடிவரவு நடவடிக்கைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கும் இடையில் இருதரப்பு தொடர்புகளின் போது குடிவரவு நடவடிக்கைகளின் ஒத்துழைப்புக்களுக்கு இரண்டு அரசுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, பரஸ்பர அனகூலங்களுக்கான தேச எல்லைகள் நிர்வாக முகாமைத்துவத்திற்கு ஒத்துழைத்தல், மனிதவள கட்டமைப்பு மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளில் இயலளவை விருத்தி செய்வதற்கான பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்கல், குடிவரவு அதிகாரிகளுக்கிடையே வசதிப்படுத்தல்கள் பரிமாற்றம், ஓழுங்குமுறையற்ற புலம்பெயர்வு, மனிதக் கடத்தல் மற்றும் ஆட்கள் வியாபாரம் போன்ற சர்வதேசக் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் போலி ஆவணங்களால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தகுந்த ஒத்தழைப்புக்களை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக
இருநாடுகளுக்கடையில் குடிவரவு நடவடிக்கைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.