crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முந்தினம் (02) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. அரச தொழில் முயற்சியாண்மை நிறுவனங்களை (SoE’s) மீள்கட்டமைக்கும் வேலைத்திட்டம்

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்கும் போது அரச தொழில் முயற்சியாண்மை நிறுவனங்களை மீள்கட்டமைப்பதற்கான யோசனை கௌரவ ஜனாதிபதி அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, தற்போது அரச தொழில் முயற்சியாண்மைகளின் மீள்கட்டமைப்புக்கான செயன்முறைக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரச தொழில் முயற்சிகள் மீள்கட்டமைப்பு அலகொன்று நிறுவப்பட்டுள்ளது.

மீள்கட்டமைப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் நிறுவனங்களில் ஒருசில அரச நிறுவனங்களாவதுடன், அவ்வாறான ஒருசில கம்பனிகளில் பெரும்பான்மைப் பங்குகள் அரசக்குச் சொந்தமாகவுள்ளது. அத்துடன், ஒருசில அரச தொழில் முயற்சிகள் கூட்டுத்தாபனங்களாக இயங்குகின்றன.

குறித்த இந்நிலைமையின் கீழ் அரச தொழில் முயற்சிகளை மீள்கட்டமைக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 100% வீதமான பங்குகளின் உரித்து திறைசேரியின் செயலாளருக்கு கிடைக்கும் வகையில் திறைசேரியில் இணைப்புச் செய்யப்பட்ட தாய்க் கம்பனியை நிறுவுவதற்கும், மீள்கட்டமைப்பதற்காக அடையாளங் காணப்படுகின்ற அரச தொழில் முயற்சியாண்மைகளை குறித்த தாய்க் கம்பனியுடன் இணைப்புச் செய்யப்பட்ட கம்பனியாக பதிவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமரப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. நகரும் சாதனங்கள் தொடர்பான சர்வதேச உரிமைகள் பற்றிய கேப்டவுன் சமவாயம் மற்றும் வானூர்தி உபகரணங்களுக்கான விசேட விடயங்கள் தொடர்பான சர்வதேச உரிமைகள் தொடர்பான சமவாயத்தை ஏற்றுக்கொள்ளல்

பிரத்தியேக சட்டங்களை ஒருங்கிணைக்கும் சர்வதேச நிறுவனம் மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் அனுசரணையுடன் 2001 ஆம் ஆண்டு, நகரும் சாதனங்கள் தொடர்பான சர்வதேச உரிமைகள் பற்றிய கேப்டவுன் சமவாயம் மற்றும் வானூர்தி உபகரணங்களுக்கான விசேட விடயங்கள் தொடர்பான நகரும் சாதனங்கள் தொடர்பான சர்வதேச உரிமைகள் பற்றிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

குறித்த சமவாயத்தை ஏற்றுக் கொள்வதற்கும், அதற்குரிய ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை வகுப்பதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளை பரிசோதித்தல், தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான அறிவியல் சோதனை பணிமுறை முன்னேற்பாடு

எமது நாட்டிலிருந்து 33 வகையான உணவுற்பத்திகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீனக் குடியரசின் பொதுச் சுங்க நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 29 உற்பத்திகள் நீரியல் வள உற்பத்திகளாக காணப்படுவதுடன், சீனக் குடியரசில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கம்பனிகளில் 38 கம்பனிகள் குறித்த ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவுக்கு நீரியல் வள உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும், மற்றும் ஊக்குவிப்பதற்கும் இயலுமாகும் வகையில் இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளைப் பரிசோதித்தல், தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான அறிவியல் சோதனைப் பணிமுறை முன்னேற்பாடு (Pசழவழஉழட)இ சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. பாடசாலைகளில் 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரைக்கும் மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தல் (6 ஆம் தரம் தவிர்ந்த)

பாடசாலைகளில் 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரைக்கும் மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தல் (6 ஆம் தரம் தவிர்ந்த) தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் ஒழுங்குமுறைப்படுத்தி இடைத்தரங்களில் பாடசாலையை மாற்றுவதற்கு உண்மையான தேவையுடையவர்களை அடையாளங்கண்டு, அனைத்து மாணவர்களுக்கும் நியாயமானதும் சமமானதுமான வாய்ப்புக்கள் கிடைக்கும் வகையில் புதிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவும்,

தற்போது காணப்படுகின்ற 1-5 ஆம் தரம் வரைக்கும் ஒரு வகுப்பில் உயர்ந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 உம், மற்றும் 6-11 ஆம் தரம் வரைக்கும் ஒரு வகுப்பிற்கு உயர்ந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் குறித்த பொறிமுறையை மாற்றியமைக்காமல் மேற்கொண்டு செல்வதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் துரிதசேவை அலகொன்றை நிறுவுதல்

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நகர்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் செயன்முறையைத் துரிதப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள அபிவிருத்தி விண்ணப்பங்களைத் தயார்படுத்தும் செயன்முறையை மேம்படுத்தி ஒரே இடத்தில் (one-stop unit) அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அலகொன்றை நிறுவுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. பொரல்ல ஓவல் வியூ றெசிடன்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் வீட்டு அலகுகளை அறுதி உறுதி உரிமைத்தத்துவதார அடிப்படையில் விற்பனை செய்தல்

அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 608 வீட்டு அலகுகள் மற்றும் 05 வர்த்தக அலகுகளுடன் கூடிய 24 அடுக்குமாடிகளைக் கொண்ட பெலன்கஸ்துடுவ, பொரல்ல ஓவல் வியூ றெசிடன்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டு வதிவிடதார உரித்து வதிவிடக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வதிவிடக்காரர்களுக்கு அறுதி உறுதி உரிமைத்தத்துவத்தை வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலவாரியான மீள்நோக்கு 4 ஆவது காலவரிசை (UNHRC Universal periodic review 4th cycle)

2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய அனைத்து உறுப்பு நாடுகளும் உலகளாவிய காலவாரியான மீள்நோக்கு உட்பட்டு செயற்படல் வேண்டும். அதனால், உறுப்பு நாடுகளில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், மற்றும் குறித்த நாடுகளில் மனித உரிமைகளுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

அனைத்து உறுப்பு நாடுகளின் அரசுகள் தமது மீள்நோக்குகளை 4 ஆண்டுகளுக்கொருமுறை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை இதுவரைக்கும் 3 காலவரிசை மீள்நோக்கு அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதுடன், அடுத்துவரும் மீள்நோக்கு காலவரிசை அமர்வு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

4 ஆவது காலவரிசை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள, இலங்கையின் தேசிய அறிக்கைகள் மூலம் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்நோக்குகளிலிருந்து இதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பான சுயமதிப்பீட்டை சமர்ப்பிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தைத் திருத்தம் செய்தல்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு அங்கத்தவர்களை நியமித்தல் தொடர்பான ஏற்பாடுகள் 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் 5(1) ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், குறித்த ஏற்பாட்டுக்கமைய துறைமுக விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் பிரதிநிதியொருவரை பணிப்பாளர் சபைக்கு நியமிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் வகுக்கப்படவில்லை.

குறித்த தீர்மானங்கள் எடுக்கும் போது விடயதான அமைச்சரின் பிரதிநிதித்துவம் இருப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால், அதற்கமைய செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் 5(1) ம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அரச காணிகளை கையுதிர்க்கும் அடிப்படைச் செயற்பாடுகளை பிரதேச செயலாளர் ஊடாக மாத்திரம் மேற்கொள்ளல்

தற்போது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான காணிக் கையுதிர்த்தலுக்கான அதிகாரம் இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கும், அத்தோடு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளைக் கையுதிர்ப்பதற்கான அதிகாரம் குறித்த ஆணைக்குழுவுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குரிய நோக்கங்கள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையால், குறித்த இரண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த அரச காணிகளைக் கையுதிர்த்தல் தொடர்பான அனைத்து அடிப்படைச் செயற்பாடுகளும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாத்திரம் மேற்கொள்வதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, அரச காணிகளைக் கையுதிர்த்தல் தொடர்பாக தற்போது காணப்படுகின்ற அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை ஆராய்ந்து, அறிமுகப்படுத்த வேண்டிய புதிய சட்ட ரீதியான திருத்தங்கள் உள்ளடங்கலாக, அரச காணிகளை கையுதிர்த்தல் தொடர்பான கொள்கையை வகுப்பதற்கும், மற்றும் தேவையான வழிகாட்டல்களைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

10. 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்;ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2309ஃ40 ஆம் இலக்க 2022.12.09 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிள் 23 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.
2311/08 ஆம் இலக்க 2022.12.19 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிள் 24 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.
2311/18 ஆம் இலக்க 2022.12.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிள் 25 ஆம் இலக்க செலுத்தல் முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள்.

11. உள்ளார் சந்தையில் நிலவுகின்ற முட்டைத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக முட்டை இறக்குமதி செய்தல்

தற்போது உள்ளூர் சந்தையில் நிலவுகின்ற முட்டைத் தட்டுப்பாடு மற்றும் முட்டை விலையேற்றங்கள் காரணமாக நுகர்வோர் எதிர்கொண்டுள்ள சிரமங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தேவையேற்படின் அரசாங்கத்தின் தலையீட்டில் முட்டை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 7 = 12

Back to top button
error: