இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் ஜனவரி 18 முதல் கோரப்படுமென இன்று (04) அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஜனவரி 18 முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் 12.00 வரை சமர்ப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 26ஆவது பிரிவின் கீழ், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான மேயர்/ பிரதி மேயர்/தலைவர், பிரதி தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு இன்றையதினம் (04) முதல் உரிய அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கைமய ஒரு அரசியற் கட்சி அல்லது ஒரு சுயேச்சைக் குழுவினால், முதலாவது மற்றும் இரண்டாவது வேட்புமனுக்களில் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, முதலாவது மற்றும் இரண்டாவது வேட்புமனுக்களில் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் வைப்புத்தொகை விபரங்கள், உரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
2022 டிசம்பர் 29ஆம் திகதியிடப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 23/1244 இலக்கம் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பிலும் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.