“உமர் ரலி புராணம்” நூல் சென்னையில் வெளியீடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஈழம் தந்த தீந்தமிழ்ப் புலவரும், முத்தமிழ் அறிஞரும், சூஃபி ஞானியுமாகிய அல் ஆரிஃபு பில்லாஹ் இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா (ஜே.எஸ்.கே,ஏ,ஏ,எச். மௌலானா) எழுதிய “உமர் ரலி புராணம்” எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று (05) வியாழக்கிழமை மாலை 5.30 மணி முதல் சென்னை, எழும்பூர், இலக்கம் 2ஏ, பொன்னியம்மன் கோயில் வீதியில் உள்ள ரமதா ஹோட்டலில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது
ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், பெரும்கவிக்கோ, கலைமாமணி, முனைவர் வ.மு. சேதுராமன் (MA.PhD) தலைமையில் நடைபெறும் இவ்விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் முஹியத்தீன், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான்,
தமிநாடு படத்திட்ட கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, முனைவர் அஃப்ளளுல் உலமா ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி (MA.PhD), தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உட்பட தமிழ் அறிஞர்கள் ,மார்க்க அறிஞர்கள், சமுதாயத் தலைவர்கள் , பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் இவ்விழாவில் சிறப்புரையாற்றுகின்றனர்
இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப்புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் ரலி புராணம். காப்பிய இலக்கணம் காவிய அலங்காரங்களுடன் செந்தமிழ் நடையில் 21ஆம் நூற்றாண்டில் எழுந்த இவ்வரிய புராணத்திற்கு சென்னையில் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
நபிகள் நாயகத்தின் அருமைத் தோழரும் இஸ்லாமிய பேரரசின் இரண்டாவது கலீஃபாவுமாகிய உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மூன்று காண்டங்களாக வகுத்து அதன் முதலாவது உதய காண்டம் தற்போது வெளிவந்துள்ளது.
21 படலங்களையும் 682 செய்யுள்களையும் அதற்கான கொண்டுக்கூட்டு, பொருள், குறிப்பு என முழுமையான விளக்கத்தை உள்ளடக்கியதாக இவ் அரும்பெரும் காவியம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.