அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற சாபாநயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால.த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாகர காரியவசம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத அங்கத்தவர்களான கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி தில்குஷி அனுல விஜேசுந்தர, கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபிர் ஹஷீம் தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றைய தினம் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என அறிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
அரசியலமைப்பு உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் ஊடாக அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அரசியலமைப்பின் 41 ஆ பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசியலமைப்புப் பேரவை கலந்துரையாடியிருந்ததுடன், பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக குறித்த ஆணைக்குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு ஆர்வம் காட்டும் மற்றும் தகுதிவாய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு ஆகியவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரி பத்திரிகை விளம்பரங்கள் வெளியிடப்படும். விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கு விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு இரண்டு (02) வாரகாலம் அவகாசம் வழங்கப்படும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் மேலதிக தகவல்கள் பத்திரிகை விளம்பரங்கள் ஊடாக அறிவிக்கப்படும்.
பேரவையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளை சுதந்திரமான முறையிலும், பொறுப்புடனும், வெளிப்படைத் தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்புப் பேரவை ஏகமனதாக இணங்கியது.