மட்டக்களப்பில் 380 ஏக்கர் நிலப்பரப்பில் இரால் வளர்புத் திட்டம்
மட்டக்களப்பு மண்முனைத் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முதளைக்குடா மகுலடித்தீவு பகுதிகளில் 380 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள இரால் வளர்புத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (18) இடம்பெற்றது.
நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் நவீன முறையில் இறால் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசின் விசேட வேலைத் திட்டத்தினை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை முன்னெடுத்து வரும் இத்திட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 380 ஏக்கர் நிலப்பரப்பில் இரால் வளர்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இவற்றில் 42 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறியளவிலான முதலீட்டாளர்களுக்கு தலா ஒரு ஹெக்டேயர் அளவிலும், 60 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நடுத்தர அளவிலான முதலீட்டாளர்களுக்கு தலா 04 ஹெக்டேயர் அளவிலும், 50 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பாரிய அளவிலான முதலீட்டாளர்களுக்கு 08 தொடக்கம் 20 ஹெக்டேயர் அளவிலும் இரால் வளர்ப்பிற்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சாதக பாதகங்கள் தொடர்பாக நிபுணர்களின் அறிக்கை பெறப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகளை நடாத்துவதில் தாமதம் ஏற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் காணிப் பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ரவிகுமார், பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் திருமதி. டி. தற்சனகௌரி உள்ளிட்ட பங்குதார திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பட்டிப்பளை பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.