உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் உயிர் வாழ்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவிலலை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் “உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் நேற்று (18) நடைபெற் செய்தியாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த அமைச்சர், சாரா உயிருடன் உள்ளார் என கூறப்பட்ட சாட்சியங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதாகவும் கூறினார்.
சம்பவம் தொடர்பான வழக்குகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன அத்தோடு மேலும் 42 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது ஏற்கனவே 32 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவது இதன் நோக்கமாகும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படும் சாரா தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இது குறித்து இரண்டு தடவைகள் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. தற்போது மீண்டும் ஒரு தடவை தோண்டி மரபணு பரிசோதனை மேற்கொள்ள சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
சாரா உயிர் வாழ்கிறார் என்பதற்கான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. அத்துடன் சஹ்ரானின் மனைவியான ஹாதியாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கீழ் தாக்குதல் தொடர்பான விசாரணையில் 54 அதிகாரிகள் மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை இரவு பகலாக செயல்பட்டனர்.
பகுப்பாய்வாளரின் மற்றுமொரு அறிக்கையை பெற வேண்டியுள்ளது. தற்போது 75 வீதமான விடயங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன எஞ்சிய ஆவணங்களும் வழங்கப்பட்டவுடன் ஜூலை மாதமளவில் வழக்குத்தாக்கல் செய்ய முடியும்
குண்டுத் தாக்குலை மேற்கொண்ட பயங்கரவாதியுடன் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்புபட்டிருந்ததிற்கான சாட்சியங்கள் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 724 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 227 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். 83 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிசாரினால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
சஹ்ரான் ஹசிமுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைத்தமை தொடர்பாக அமைச்சர் வீரசேகர தெரிவிக்கையில், சஹ்ரான் ஹசிம் உட்பட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஏனைய உறுப்பினர்களுக்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபா பணம் கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு பணம் அனுப்பிய 15 இலங்கையர்கள் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்த பணம் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
சுமார் மூன்று கோடி ரூபா இந்த தாக்குதலை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களுக்கு சொந்தமான சுமார் 100 வங்கி கணக்குகள் செயலிழந்து உள்ளன.
சந்தேக நபர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்திய பணத்தையும், பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவது நோக்கமாகும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.