இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (08) புதன்கிழமை வைபவரீதியாக மு.ப 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெற்றது
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றார்
படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லபட்டார்
பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்தனர்
சபா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்கினார் .
இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருந்தார்
இலங்கை அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (08) மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார்
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டதுடன் சபை 09ஆம் திகதி மு.ப 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது
சபை ஒத்திவைக்கப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.