மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மின்சார சபை மற்றும் ஆணைக்குழு என்பன கூடிக் கலந்துரையாடுமாறு தேசிய பேரவை நேற்று (13) உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
அதற்கமைய நேற்று (13) பிற்பகல் கலந்துரையாடுவதற்கு இரு தரப்பு அதிகாரிகளும் இணக்கம் தெரிவித்தனர்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் தேசிய பேரவை நேற்று (13) கூடிய போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மின்சார சபை 60% கட்டண அதிகரிப்பு கோரியுள்ள பின்னணியில் தேவையான அளவு அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை எனின் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சார சபையின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.
அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்குக் கூட நிதி இல்லாமல் போவதால் நீண்ட நேர மின் துண்டிப்புக்குச் செல்லவேண்டிய நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். மின்சார சபையின் தரவுகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்கள் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் தற்பொழுது வெளிநாடு சென்றுள்ளமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. பல மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டதற்கு அமைய உரிய அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் இந்த அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரே நடவடிக்கை எடுத்ததாகவும் இதன்போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் மின்சார சபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றின் கருத்துக்களை கலந்துரையாடி ஒரு கருத்துக்கு வந்து தீர்மானம் எடுப்பது மிக முக்கியமானது என்றும், அவ்வாறில்லை எனின் பொதுமக்கள் கஷ்டத்துக்கு உட்படுவதை தவிர்க்க முடியாமல் போகும் என சுட்டிக்காட்டிய தேசிய பேரவை இது தொடர்பில் விரைவாகக் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதன் தேவையை வலியுறுத்தியது.
அதேபோன்று, குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கும்போது முன்னுரிமைகளை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ‘தேசிய கொள்கை ஆணைக்குழு’ தொடர்பில் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தேசிய பேரவைக்கு விளக்கமளித்தார். இது தொடர்பில் எண்ணக்கருப் பத்திரத்தை தயாரித்து முடித்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார். அதற்கமைய தேசிய பேரவையூடாக தேவையான எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான கௌரவ பிரசன்ன ரணதுங்க, கௌரவ காஞ்சன விஜேசேகர, கௌரவ டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், கௌரவ டி.வி. சானக, கௌரவ சிசிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களாக கௌரவ ஜொன்ஸ்டன் பர்னாந்து, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ ஏ.எம். அதாஉல்லா, கௌரவ நாமல் ராஜபக்ஷ மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்கவும் கலந்துகொண்டார்.
அதேபோன்று இக்கூட்டத்தில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளும் தேசிய பேரவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.