crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முனகினம் (20) நடைபெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களில் 2022 ஆம் ஆண்டில் நான்காம் காலாண்டு முடிவிலான முன்னேற்றம்

பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்கள் 261 இற்கு ஏற்புடைய 2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்னேற்றங்கள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை அமைச்சரவையின் கவனத்தில் எடுக்கப்பட்டது. ஒருசில கருத்திட்டங்களுக்குரிய வெளிநாட்டு நிதி இடைநிறுத்தப்பட்டதும், நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலைமைகளால் தேவையான நிதியை வழங்குவதற்கு சிரமமாக இருந்தமையாலும், அதிகளவான கருத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மிகவும் கீழ் மட்டத்திலேயே காணப்படுகின்றது.

அனைத்து செயற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ள ஒருசில கருத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கான வசதிகள், நியதிச்சட்டமுறை அதிகாரங்கள் மற்றும் தொழிநுட்ப சேவைகள் போன்றன குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய அமைச்சின் குறிக்கோள் மற்றும் விடயத்தலைப்புக்களுடன் அல்லது ஏற்புடைய ஏனைய நிறுவனங்களின் கடமைகளில் உள்ளடக்கப்படாமையால், அக்கருத்திட்டங்களின் நிலைபேற்றுத் தன்மைக்கு இடர்கள் நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் அவற்றின் பெறுபேறுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அந்தந்த கருத்திட்டங்களை மேற்கொள்கின்ற நிரல் அமைச்சுக்களுக்குப் பொறுப்புக்களை ஒப்படைக்கும் வகையில் அபிவிருத்தி முதலீடுகளின் முக்கிய செயலாற்றுகை குறிகாட்டிகளை உள்ளடக்கி, ஒவ்வொரு நிரல் அமைச்சுக்கும் நிறுவன ரீதியான பெறுபேறுகள் அடிப்படையிலான சட்டகமொன்றும், மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான முதலீட்டுப் பெறுபேறுகள் அடிப்படையிலான சட்டகமொன்றும் தற்போது தாபிக்கப்பட்டுள்ள தேசிய தொழிற்பாட்டு மையத்தால் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. நாரங்கல மலைத்தொடர் பிரதேசத்தை வனசீவராசிகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தல்

பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலகப் பிரிவு எல்லை, சொரணாதொட்ட பிரதேச செயலகப் பிரிவின் திக்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடல் மட்டத்திலிருந்து 1,450 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் மிகவும் முக்கியமான நீரேந்துப் பிரதேசமாகக் காணப்படுவதுடன், அங்கு 100 இற்கு மேற்பட்ட நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக, இம்மலைத்தொடரிலிருந்து கமஓயா, மொரகொல்ல ஓயா, மற்றும் அம்பன்கங்கை ஓயா போன்றன ஆறுகள் குறித்த நாரங்கல மலைத்தொடர் நீர் ஊற்றுக்களின் மூலங்களிலிருந்து ஆரம்பிக்கின்றது.

இம்மலைத்தொடருக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள பல கிராமங்களுக்கான நீர் தேவை இவ் ஆறுகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. அத்துடன் குறித்த மலைத்தொடர் பகுதி உயிர்ப்பல்வகைமையுடன் கூடிய பிரதேசமாகும். இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, மலைத்தொடர் அமைந்துள்ள 239.276 ஹெக்ரயார் நிலப்பகுதியை நாரங்கல சராணாலயம் எனப் பிரகடனப்படுத்துவதற்கும், குறித்த பிரதேசத்திற்குச் சொந்தமான தனியார் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான நிலப்பகுதியையும் அரசுக்கு கையகப்படுத்துவதற்கும், பின்னர் முழுமையான அப்பிரதேசம் உயிரின தேசியப் பாதுகாப்பு வனமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. அரசு சாரா உயர்கல்லி நிறுவனங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக வழங்கப்படுகின்ற வட்டியல்லா கடன்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைத் திருத்தம் செய்தல்

இவ்விடயம் தொடர்பாக 2022.08.22 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய அரசு சாரா உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியல்லா கடன்திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு செல்வது பற்றி இலங்கை வங்கி, திறைசேரி, மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் குறித்த தரப்பினர்கள் உடன்பாடுகளுக்கமைய அப்பாடநெறிகளைப் பூர்த்தி செய்த பின்னர் பாடநெறிக்கான கட்டணத்தை எட்டு (08) வருடங்களில் தவணை அடிப்படையில் மீளச் செலுத்துவதற்கும், பாடநெறியைப் பூர்த்தி செய்த பின்னர் தொடர்ந்து வரும் ஆண்டில் நிலவுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட முன்னுரிமை கடன் வழங்கல் வீதம் 1% வீதம் சேர்க்கப்பட்டு (AWPLR + 1%) மாதாந்த வட்டி வீதத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வீதத்தைச் செலுத்துவதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தரப்பினர்களுக்கிடையே தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்தம் செய்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. மேலதிகக் கட்டணத்திற்கு வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல் (சுங்கக் கட்டளைகள் சட்டம்)

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10(அ) பிரிவின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட பண்டங்கள் சிலவற்றுக்காக சுங்க இறக்குமதித் தீர்வை வரி வீதமாக மேலதிகக் கட்டணத்தை விதிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள இரண்டு ஒழுங்குவிதிகள் 2022.11.30 மற்றும் 2023.01.04 ஆம் திகதிய அரச வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிகக் கப்பல் சட்டம் மற்றும் 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்

துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற வணிகக் கப்பற்றுறைச் செயலகத்தால் 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிகக் கப்பல் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் 13 வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் கட்டணங்களை திருத்தம் செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்;

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் கட்டணங்களை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏற்பாடுகளை தயாரிப்பதற்காக 2017 ஆம் ஆண்டின் ஆட்களைப் பதிவு செய்தல் ஒழுங்குவிதிகள் இலக்கம் 1 இனைத் திருத்தம் செய்து தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூல ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும், பின்னர் குறித்த ஒழுங்கு விதிகளை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. தேசிய பாதுகாப்பு சபை தாபிப்பதற்கான சட்டமூலம்

1999 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் ஜனாதிபதி அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்ளூர், சர்வதேச, பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேற்கொள்கின்ற அடிப்படை நிறைவேற்று நிறுவனமாக இயங்குகின்றது.

2023.01.12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தேசிய பாதுகாப்பு சபைக்கு நியதிச்சட்ட முறையுடனும்;, மற்றும் தெளிவான கட்டமைப்புடன் கூடியதாக தாபிக்க வேண்டிய தேவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய பாதுகாப்பு சபை பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் சட்டபூர்வமாக்குவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. சென்மதி நிலுவைகளுக்கான திறைசேரி முறி வெளியிடல்

அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஈடு செய்யப்பட வேண்டிய கொடுப்பனவுகள்ஃசெலுத்தப்படாத சென்மதி நிலுவைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய திறைசேரியின் செயலாளரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் அறிக்கை மூலம் சந்தை மற்றும் திறைசேரி நிதிப் பாய்ச்சல் தொழிற்பாட்டை இலகுபடுத்தும் வகையில் விநியோகத்தர்களுக்குஃஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தைக் காசாக செலுத்துவதற்குப் பதிலாக திறைசேரி முறி வெளியிட்டு அவற்றை ஈடுசெய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. தேசிய விருது வழங்கல்

இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பல்வேறு துறைகளில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டுமுகமாக தேசிய விருது வழங்கல் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 1995.03.20 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதிகளால் இலங்கையர்களுக்கான ஸ்ரீலங்காபிமானம், தேசமான்ய, தேசபந்து, வித்யாஜோதி, கலாகீர்த்தி, ஸ்ரீலங்கா சிகாமணி, வித்யாநிதி, கலாசூரி, ஸ்ரீலங்கா திலகம், வீரபிரதாப போன்ற முறைசார்ந்த நடபடிமுறைகளுக்கமைவான விருதுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் 1990.09.12 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீலங்காரஞ்சன, ஸ்ரீலங்காரத்ன மற்றும் ஸ்ரீலங்காரம்ய போன்ற விருதுகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அத்துடன் 2008.02.08 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஸ்ரீலங்கா மிதரவிபூசன விருது இலங்கை மக்களுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களைப் பாராட்டி இலங்கையுடன் நல்லுறவுகளைப் பேணுகின்ற அரச தலைவர்களுக்கு வழங்கிக் கௌரவிப்பதுடன், இவ்விருது இலங்கையர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகின்ற தேசிய விருதுகள் வரிசையில் உயரிய விருதாகும். தற்போது குறித்த தேசிய விருதுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிடங்கள் காணப்படுவதுடன்,

முறைசார்ந்த நடபடிமுறைகளைக் கடைப்பிடித்து தேர்ந்தெடுக்கப்படும் தகைமைவுடையவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. அத்துடன், குறித்த விருதுகளுக்கு மேலதிகமாக கலை, இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டுவதற்காக விசேட கௌசல்யாபிமானி விருது தேசத்திற்கு வழங்கிய பெரும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்காக விசேட குடியரசு அபிமான விருது இலங்கையர்களுக்கு வழங்குவது பொருத்தமானதெனவும் அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வர்த்தமானி அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடபடிமுறைகளுக்கு அமைவாக விண்ணப்பங்களைக் கோரி விருது வழங்குவதற்கான தெரிவுகளுக்கும், முறைசாரராத வகையில் வேறு நிறுவனங்கள் மூலம் தேசிய விருது வழங்குவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைத் தயாரித்து பாராளுமன்ற சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் ஏற்புடையவாறு கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

10. 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிதி

2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் 2023 நிதியாண்டுக்கான 4,979 பில்லியன் ரூபாய்களை விஞ்சாத கடன் பெறுகைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த கடன் பெறுகைக்கான எல்லை நிதியாண்டில் கடன்களை மீளச் செலுத்தல், வட்டி செலுத்தல் மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகள் மீளவும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. நிதியாண்டுக்கான மொத்தக் கடன் பெறுகைகளை 4,979 பில்லியன் ரூபாய்கள் விஞ்சாத உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்வதுடன், உள்ளூர் மூலங்களிலிருந்து 3,526 பில்லியன் ரூபாய்கள் மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து 1,453 பில்லியன் ரூபாய்களையும் பெற்றுக் கொள்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் மூலங்களின் கீழ் திறைசேரி முறிகள், திறைசேரி பிணையங்கள், வங்கி வெளிநாட்டு நாணய அலகுக் கடன்கள், மற்றும் இலங்கை அபிவிருத்திப் பிணையங்கள் மூலம் தேவையான கடன் தொகைகள் பெற்றுக்கொள்ளப்படும். 2022 ஏப்ரல் மாதத்தில் இலங்கை அரசு வெளிநாட்டு கடன் சேவைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள கொள்கைக்கு இணங்கியொழுகி, 2023 நிதியாண்டில் முதல் 06 மாதங்களில் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் சேவை செலுத்தல்கள் 2,609 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 2,069 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கடன் தவணையை செலுத்துவதற்கும், 540 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வட்டியை செலுத்துவதற்குமாகும். வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய கடன் சேவைச் செலுத்தல்களில் 709 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அபிவிருத்தி பிணையக் கடன் மற்றும் அதற்கான வட்டியாக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களும் உள்ளடங்குகின்றது.

அதற்கமைய, அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாருக்கு அதிகாரமளிப்பதற்காக, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கண்டி நகர அபிவிருத்திக்கான அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல்

கண்டி நகரத்தில் நிலவுகின்ற நெரிசலைக் குறைப்பதற்காக முறையான திட்டமொன்றின் கீழ் குறித்த நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதி அவர்களால் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதற்கமைய, கண்டியிலிருந்து குண்டசாலை வரையான கண்டி நகரத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பொருத்தமான திட்டம் மற்றும் குறித்த நிறுவன அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − = 51

Back to top button
error: