இக்கட்டான நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு தனவந்தர்கள், பரோபகாரிகள், வசதிபடைத்தோர் தங்களாலான உதவி ஒத்தாசைகளை இன, மத பேதமின்றி செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யாதுல் உலமா பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது
அகில இலங்கை ஜம்இய்யாதுல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“எமது நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அனைவரும் சொல்லொண்ணா இன்னல்களை அனுபவித்து வருவதை நாம் அறிவோம். இந்நிலையில் மென்மேலும் உயரும் மின் கட்டணம், பொருட்களின் விலையேற்றம் நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்துள்ளன. மூன்று வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் அல்லலுறும் எண்ணற்ற குடும்பங்களின் கவலைக்கிடமான தகவல்கள் ஐம்இய்யாவுக்கு கிடைத்த வண்ணமுள்ளன.
தங்களது நோய்களுக்கு தொடர்ந்து மாத்திரைகளை உபயோகித்து வந்த பலரும் அவற்றை வாங்குவதற்கு வசதியின்மையால் அவற்றை நிறுத்தி வருவதாகவும் அது ஆபத்தான விளைவுகளை நோயாளர்களுக்கு கொண்டு வரும் என்றும் வைத்திய அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரச் சுமைகளைக் குறைக்க உரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு ஜம்இய்யா தன்னாலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே இந்த இக்கட்டான நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு தனவந்தர்கள், பரோபகாரிகள், வசதிபடைத்தோர் தங்களாலான உதவி ஒத்தாசைகளை இன, மத பேதமின்றி செய்யுமாறும், ஜம்இய்யாவின் கிளைகள், மஸ்ஜித் நிர்வாகிகள், ஏனைய சமூக அமைப்புக்கள் இதனை முன்னுரிமைப் படுத்தி செயற்படுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.
மக்கள் பசிபட்டினியால் வாழும் காலத்தில் அவர்களுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நரகிலிருந்து தங்களைப் பாதுகாக்க மிக முக்கியமான வழியென அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
எனவே, தேவைப்பட்டோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் தௌபீக் செய்வானாக.” எனவும் அகில இலங்கை ஜம்இய்யாதுல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.