பாராளுமன்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (24) இடம்பெற்றபோதே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது, கௌரவ லசந்த அழகியவண்ணவின் பெயரை இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர முன்மொழிந்ததுடன், இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் வழிமொழிந்தார்.
கோபா குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹஷீமின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசோக் அபேசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனோ கணேசன் வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கௌரவ லசந்த அழகியவண்ணவுக்கு 14 வாக்குகளும், கௌரவ கபீர் ஹஷீமுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.
இக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ காதர் மஸ்தான், கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ டயனா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.பி. திசாநாயக்க, கௌரவ வஜிர அபேவர்தன
கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ கபீர் ஹஷீம், கௌரவ மனோ கணேசன், கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ ஜே.சி. அளவதுவள, கௌரவ வடிவேல் சுரேஷ், கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ டி. வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.