அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றதையும், பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே இருந்ததையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நாட்டை மீட்டெடுக்க முடியாது என பலரும் நினைத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் கடந்த 7 மாதங்களில் அந்த நிலையை மாற்றி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தனது அணியினரால் முடிந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இலங்கை இனியும் வங்குரோத்து நாடாக இல்லை என்றும் வலியுறுத்தினார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அனைவரும் காண முடியும் எனவும், பிராந்தியத்தில் மிகவும் வளமான நாடாக இலங்கையை மாற்ற, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினால் மட்டும் போதாது எனவும், அதற்கு பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கான 25 வருட திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் மட்டுமே அதனை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
அலரி மாளிகையில் இன்று (19) நடைபெற்ற 32ஆவது இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.
கொழும்பு புனித தோமஸ் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, விசாகா கல்லூரி, கண்டி உயர் பெண்கள் பாடசாலை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை 32வது இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டின் தலைவர் அப்துல்லா சித்தீக் வரவேற்றார்.
இன்டரெக்ட் உலகளாவிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் வழங்கப்படும் ஒத்துழைப்பையும் பங்கேற்பையும் பாராட்டி, சர்வதேச ரொட்டரி கழக மாவட்டத் தலைவர் (இலங்கை மற்றும் மாலைதீவு) புபுது டி சொய்சா , ஜனாதிபதிக்கு ஒரு சின்னத்தை அணிவித்ததோடு, இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டின் தலைவர் அப்துல்லா சித்தீக் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் சர்வதேச ரோட்டரி கழக மாவட்டத் தலைவர் (இலங்கை மற்றும் மாலைதீவு) புபுது டி சொய்சா, மாவட்ட இண்டராக்ட் குழுத் தலைவர் ஷனாஸ் ஷஹாப்தீன், இளைஞர் குழுத் தலைவர் ஜி. திரு.எஸ்.சில்வஸ்டர், திரு.கிருஷாந்த பெர்னாண்டோ உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.