ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கோர காமினி லொக்குகே நேற்று (21) தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யதாமினி குணவர்தன அவரது பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த கெட்டகொட வழிமொழிந்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் புதிய தலைவர் குறிப்பிடுகையில், பொது மனுக்கள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத சந்தர்ப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவை தொடர்பில் எதிர்கால நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்கு முக்கிய பங்காற்றும் பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக தான் இதற்கு முன்னரும் பணியாற்றியதை நினைவுகூர்ந்த கௌரவ காமினி லொக்குகே எதிர்காலத்திலும் அதற்கு அர்ப்பணிப்பதாகத் குறிப்பிட்டார்.
இதன்போது இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ எஸ். வியாழேந்திரன், கௌரவ அரவிந்த குமார், கௌரவ கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திலிப் வெதஆராச்சி, கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ மொஹமட் முஸம்மில்,
கௌரவ வேலு குமார், கௌரவ வருண லியனகே, கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க மற்றும் கௌரவ யதாமினி குணவர்தன ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சியும் கலந்துகொண்டார்.