இலங்கை இளைஞர்களுக்குத் தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக பிரதி சாபாநயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவைச் சந்தித்த தென்கொரியாவின் புகழ்பெற்ற நிறுவமான ‘ஹூண்டாய்’ (Hyundai) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தார்.
தென்கொரிய வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கை இளைஞர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள், அது தொடர்பான பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை ஆராய்வதற்காக இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள ஹூண்டாய் கப்பல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர், பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவை இன்று (04) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தனர்.
இந்நாட்டின் இளைஞர்கள் உயர்ந்த திறமையைக் கொண்டவர்கள் என்றும், பயிற்சி பெற்ற இலங்கை இளைஞர்களை அதிகமாக அந்நாட்டுக்கு அழைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இந்தப் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியது.
இந்தத் தொழிலாளர்கள் நல்ல பண்புகளுடன் ஒழுக்கமான இளைஞர்களாக இருப்பது முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசாங்கம் தலையிட்டு இந்நாட்டில் முறையான தொழிற்பயிற்சிகளை வழங்குவதுடன், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தாமதமின்றி தென்கொரியாவிற்கு விரைவில் அனுப்ப வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நாட்டு தொழிலாளர்களுக்கான வசதிகளும் பாதுகாப்பும் அதிகபட்சமாக வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு, இலத்திரனியல் மற்றும் வெல்டின் போன்ற துறைகளில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு அதிக தேவை இருப்பதாகவும், அவர்கள் அதிக சம்பளம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்றும் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் கெளரவ அஜித் ராஜபக்ஷ குறிப்பிடுகையில்,
இலங்கையில் திறமையான தொழிலாளர்களுக்கான முழுமையான வசதிகளுடன் கூடிய பயிற்சி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொழில் திறன் மட்டுமின்றி, கொரிய மொழி, கலாச்சாரம் போன்றவற்றையும் இதன் மூலம் புரிந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் தமது விருப்பத்தைத் தெரிவித்த இக்குழுவினர், இந்நாட்டிலுள்ள திறமையான இளைஞர்களுக்குத் தென்கொரியாவில் மென்மேலும் பல வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வீரசுமன வீரசிங்க மற்றும் கௌரவ சம்பத் அத்துகோரல ஆகியோரும் இணைந்துகொண்டனர்.