இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (03) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
01. உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்காக நியமனப் பத்திரங்கள் சமர்ப்பித்துள்ள அரச அலுவலர்களுக்கான அடிப்படைச் சம்பளம் செலுத்தல்
உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக அரச அலுவலர்கள் 3,000 பேர் நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளதுடன், அவர்களுக்கு தாபனக்கோவை விதியின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளமையால், அவர்களின் சம்பளமற்ற விடுமுறைக்கான காலம் நீடிக்கப்படுகின்றமையால் குறித்த அலுவலர்கள் பொருளாதார ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதனால், உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்காக நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ள அரச அலுவலர்களுக்காக 2023.03.09 ஆம் தொடக்கம் 2023.04.25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய குறித்த அந்தந்த அலுவலர்களின் அடிப்படைச் சம்பளத்தைச் செலுத்துவதற்காக அரச பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. தேயிலை சக்தி நிதியத்தின் பங்குதாரர்களிடமிருந்து தேயிலை சக்தி நிதியத்திற்கு மீண்டும் பங்குகளைக் கொள்வனவு செய்தல்
தேயிலை சக்தி நிதியத்தின் பங்குதாரர்களிடமிருந்து குறித்த பங்குகளை மீண்டும் தேயிலை சக்தி நிதியத்திற்கு கொள்வனவு செய்தல் தொடர்பான முன்மொழிவு பற்றி 2022.09.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதில், முதலாவதாக குறித்த முன்மொழிவு பற்றி தேயிலை சக்தி நிதியத்திற்குரிய நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய பங்கொன்றின் பெயரளவிலான பெறுமதி ரூ.10/= இனை மீளச் செலுத்தி குறித்த பங்குரிமைகளை தேயிலை சக்தி நிதியத்திற்கு பெற்றுக் கொள்வதற்கும், அதற்காக தேயிலை சக்தி நிதியத்தின் ஈட்டிக்கொண்ட நிதியைப் பயன்படுத்துவதற்கு பெருந்தோட்டத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. சுகாதாரத் துறை மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் 75 நோயாளர் காவு வண்டிகளுக்கான பெறுகைக் கோரல்
ஆசிய அபிருத்தி வங்கி, வறுமைக் குறைப்பு ஜப்பான் நிதியம் மற்றும் இலங்கை அரசால் வழங்கப்படுகின்ற மீள்நிதியுடன் இணைந்து 123 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் சுகாதாரத் துறை மேம்பாட்டுக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த கருத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் மூலம் 50 நோயாளர் காவு வண்டிகள் கொள்வனவுக்கும், மற்றும் வறுமைக் குறைப்பு ஜப்பான் நிதி வழங்கலின் கீழ் 25 நோயாளர் காவு வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நோயாளர் காவு வண்டிகளில் 30 வண்டிகள் சுகாதார அமைச்சுக்கும், ஏனைய 45 நோயாளர் காவு வண்டிகளை சுகப்படுத்தும் சேவை மன்றத்திற்கு (Suwaseriya foundation) வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பெறுகைச் செயன்முறையைத் துரிதப்படுத்தி நோயாளர் காவு வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க மத்தியஸ்த விசேட வகுதிகளைச் சார்ந்த பிணக்குகள் (மத்தியஸ்தர்களின் தகைமைகள்) கட்டளைகள்
2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகுதிகளைச் சார்ந்த பிணக்குகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களால் 2021.12.21 அன்று அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் மூலம் நிதிசார் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களிலிருந்து எழுகின்ற நிதிசார் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக 06 நிர்வாக மாவட்டங்களில் மத்தியஸ்த சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அவ்வாறான நிதிசார் சபைக்கு நியமிக்கப்படும் குழாத்தினரின் தகைமைகளைத் தீர்மானிப்பதற்கான அதிகாரம் 2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகுதிகளைச் சார்ந்த பிணக்குகள்) சட்டத்தின் 4 (2) பிரிவின் கீழ் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2023.01.14 ஆம் திகதிய மற்றும் 2314/80 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க மத்தியஸ்த விசேட வகுதிகளைச் சார்ந்த பிணக்குகள் (மத்தியஸ்தர்களின் தகைமைகள்) சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. 2022/23 பெரும்போகச் செய்கை நெற் கொள்வனவு வேலைத்திட்டம்
குறைந்த வருமானங் கொண்ட 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 கிலோக்கிராம் அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்காக 2023.01.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிகமாக 850,000 குடும்பங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளமையால், அவர்களையும் இவ்வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்வது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, இவ்வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த 850,000 குடும்பங்களையும் உள்வாங்கி 2.85 மில்லியன் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 கிலோக்கிராம் வீதம் இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் மேலதிகமாக 13 பில்லியன்கள் வரைக்கும் அதிகரிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவ வழங்கல் பிரிவுக்குத் தேவையான சத்திரசிகிச்சை மென்துணிகளை (Surgical Gauze) உள்ளூர் விநியோகத்தர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான பெறுகைக் கோரல்
அரச மருத்துவமனைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான சத்திரசிகிச்சை மென்துணிகளை நிரந்தர கூப்பன் முறையின் கீழ் உள்ளூர் சிறியளவிலான உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக 2012.12.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்குத் தேவையான சத்திரசிகிச்சை மென்துணிகள் 30 மில்லியன் மீற்றர்களைக் கொள்வனவு செய்வதற்காக மருத்துவ வழங்கல் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள 405 சத்திரசிகிச்சை மென்துணி விநியோகத்தர்களில் 348 விநியோகத்தர்களை அமைச்சரவையின் நிரந்தர பெறுகைக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சை மென்துணி மீற்றர் ஒன்றின் நிரந்தர விலையாக ரூ.74.96 என அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதற்மைய, 2023 ஆம் ஆண்டுக்கான சத்திரசிகிச்சை மென்துணிகள் 30 மில்லியன் மீற்றர்களைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகைக் கோரலில் தெரிவு செய்யப்பட்டுள்ள 348 பேருக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக சட்டத்தை வகுப்பதற்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2023.01.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ஆலோசனைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை வரைபுக்கமைய சட்ட வரைபொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 2023 ஆம் ஆண்டு சிறுபோக நெற் செய்கைக்கான உர மானியம் வழங்கல்
2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்கான உர மானியம் வழங்கல் தொடர்பாக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, உர விநியோகத்திற்காக ஹெக்ரெயார் ஒன்றுக்கு 20,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் இரண்டு ஹெக்ரெயார்களுக்கு நிதி மானியத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிச்செல்லல் / நடமாடும் பிரதேசத்தில் சர்வதேச உணவு விடுதி வலையமைப்பின் உணவு விடுதி மற்றும் அல்லது சர்வதேச வியாபாரப் பெயர்களிலான ஆடைகள் மற்றும் உபகரணங்கள் விற்பனை நிலையத்தை நடாத்திச் செல்வதற்கான தேசிய போட்டி விலைமுறி கோரல்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிச்செல்லல் / நடமாடும் பிரதேசத்தில் சர்வதேச உணவு விடுதி வலையமைப்பின் உணவு விடுதி மற்றும் அல்லது சர்வதேச வியாபாரப் பெயர்களிலான ஆடைகள் மற்றும் உபகரணங்கள் விற்பனை நிலையத்தை நடாத்திச் செல்வதற்கான தேசிய போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக் காண்பிக்கப்பட்டுள்ள உயர்வான விலைமுறியைச் சமர்ப்பித்துள்ள M/s Flemingo Duty Free (Pvt) Ltd நிறுவனத்திற்கு 03 வருடங்களுக்கு 2,502,624 அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கம்பனியின் வருமானத்தை அதிகரிப்பதற்கான கணணி மென்பொருள் தீர்வுக்கான பெறுகையை வழங்கல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கம்பனியின் வருமானத்தை அதிகரிப்பதற்கான கணணி மென்பொருள் தீர்வொன்றை வழங்குவதற்காக சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைக் கடைப்பிடித்து விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்கமைய 04 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய விபரங்களுடன் கூடிய பதிலளிப்பை சமர்ப்பித்துள்ள விலைமுறிதாரரான ஐக்கிய இராச்சியத்தின் PROS, Inc கம்பனிக்கு 05 வருடங்களுக்கு 3,243,600 அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. இலங்கை மின்சார சபையின் தெஹிவல மிடுக்கான மானிவாசிப்பு (Smart Metering) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
ஆரம்ப கட்டமாக தெஹிவல பிரதேசத்தில் 50,000 பாவனையாளர்களை இலக்காகக் கொண்டு மிடுக்கான மானிவாசிப்பு தொகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான மதிப்பீட்டு செலவு 1,000 மில்லியன் ரூபாய்களாகும். இதற்காக வசதிகளை திட்டமிடல், விநியோகம், நிறுவுதல், பரீட்சித்தல் மற்றும் ஆரம்பித்தலுக்கான சர்வதேச போட்டி விலைமுறிக் கோரல் பொறிமுறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன்,
அதற்கமைய 05 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய விபரங்களுடன் கூடிய பதிலளிப்பை சமர்ப்பித்துள்ள விலைமுறிதாரரான சீனாவின் M/s Yantai Dongfang Wisdom Electric Co.Ltd கம்பனிக்கு 937.01 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.