அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது
ஆபாசப் பட நடிகையுடன் தொடர்பை மறைக்க 1,30,000 டாலர் வழங்கியதாக புகார்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார். அதன்பின் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016 ல் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்டரீதியிலான செலவு என்று பதிவு செய்யப்பட்டது என்பது தான் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு. அமெரிக்காவில் பொய்யான வணிக செலவை காட்டுவது சட்டவிரோதம் ஆகும்
டொனால்ட் ட்ரம்ப் மீது ஏற்கெனவே ஜார்ஜியா நீதிமன்றத்தில் 2020 தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முயன்றதாக ஒரு கிரிமினல் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
ட்ரம்ப் தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியபோது வெள்ளை மாளிகையில் இருந்து சில முக்கிய கோப்புகளை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் கூறி அவருடைய ஃப்ளோரிடா வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை செய்தமையும் குறிப்பிடத்தக்கது
நெருக்கடிகளுக்கு மத்தியில் ட்ரம்ப் 2024ல் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் ஆயத்தமாகி வருகிறார்.