கிளிநொச்சி கரும்புத் தோட்ட காணி தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அக்கராயன் – ஸ்கந்தபுரம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்ட காணி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (12) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கரும்புத் தோட்ட காணிகளை பிரதேச மக்களும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயன்படும் வகையில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காணியில் கரும்பு செய்கையை மேற்கொள்வதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவர் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில், பத்து ஏக்கர் காணியை குறித்த முயற்சியாளருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மூன்று ஏக்கர் காணியை கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. பயிர் செய்கை மேற்கொள்வதற்கு பொருத்தமான 146 ஏக்கர் காணிகளை குறித்த பிரதேசத்தினை சேர்ந்த காணிகள் அற்ற மக்களுக்கு காணிக் கச்சேரி ஊடாக பகிர்ந்தளிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.க. ஸ்ரீமோகனன்,மேலதிக அரசாங்க அதிபர்( காணி)திரு.திருலிங்கநாதன், திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் திரு.வை.தவநாதன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் மேலதிக இணைப்பாளர் திரு.கோ.றூஷாங்கன், துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.