பிரிட்டனில் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பிரிட்டனில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாகவும், மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு வைரஸ் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம் அலை முடிவுக்கு வந்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். டெல்டா வைரஸ் ரகம் உலக அளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன.
பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் இரண்டாவது அலை ஏற்கெனவே ஓய்ந்துள்ளது. இந்தநிலையில் தற்போது அந்நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக வைரஸ் மற்றும் தடுப்பூசி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பரவி வருவது மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் ரகம் என எச்சரித்துள்ளனர்.
இரண்டாம் அலையைக் காட்டிலும் பிரிட்டனில் மூன்றாவது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் பிரிட்டன் அரசு கவனமாக கையாள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தடுப்பூசி ஆய்வாளரும் பேராசிரியருமான ஆடம் பின் கூறியதாவது
“டெல்டா ரக கரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக நாட்டின் பெரும்பான்மையான குடிமக்களின் நலனை காக்க முடியும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.(இந்து)