crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. நுவரெலியா சுற்றுலா அபிவிருத்தி பிரதான திட்டத்தைத் தயாரித்தல்

நுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற வகையிலான அபிவிருத்திகள் காரணமாக நுவரெலியா நகரத்தின் அழகிய தோற்றம் படிப்படியாகக் குன்றி வருவதுடன், அதன்மூலம் சுற்றுலாத்துறைக்குப் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால், குறித்த பிரதேசத்தில் சுற்றுலாத்துறையின் விருத்திக்குத் தேவையான சூழலை உருவாக்கக்கூடிய வகையில் விரிவான சுற்றுலா அபிவிருத்திக்கான பிரதான திட்டத்தை தயாரிக்க வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது.

அதற்கமைய, குறித்த அனைத்து பங்கீடுபாட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நுவரெலியா சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான பிரதான திட்டத்தைத் தயாரிப்பதற்கும், புதிய கட்டிட நிர்மாணங்களுக்கான ஒழுங்குபடுத்தல்களுக்காக மத்திய மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையிலான செயலணியொன்றை நியமிப்பதற்கும், 2023.05.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவான ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கும் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கீழ்க்காணும் ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2326/40 ஆம் இலக்க 2023.04.06 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானிப் பத்திரத்தில் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள்.
• 2326/41 ஆம் இலக்க 2023.04.06 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானிப் பத்திரத்தில் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.

03. விவசாய வனவியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச நிலையம் (ICRAF) மற்றும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் (GGGI) ஆகியவற்றுக்கு இலங்கை அரசால் வழங்கப்பட்டுள்ள விடுபாட்டுரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள்

1996 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய எமது நாட்டில் இயங்கி வருகின்ற சர்வதேச அமைப்புக்களுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகளை அரச வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

அதற்கமைய, விவசாய வனவியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச நிலையம் (ICRAF) மற்றும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்திற்கு (GGGI) இற்குமிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் சரத்துக்களுக்கமைய குறித்த சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகளை அரச வர்த்தமானிப் பத்திரத்தில் வெளியிடுவதற்கும், குறித்த தகவல்களைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவும் வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தை திருத்தம் செய்தல்

சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொழிலுக்குப் பிரவேசித்துள்ள தரப்பினர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, உப முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக இணைத்துக் கொள்கின்ற செயன்முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களை ஆபத்துக்குள்ளாக்குகின்ற பாரியளவிலான மோசடிகள் மற்றும் ஊழல்களைக் குறைப்பதற்கு இயலுமை கிட்டும்; வகையில் புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இலங்கையில் பொருளாதார நிலைபேறு மற்றும் மீட்பு வேலைத்திட்டத்திற்காக உலக வங்கியின் அபிவிருத்தி நிதியிடல் வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல்

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி வேலைத்திட்டத்திற்கமைய இலங்கை அரசால் பேரண்டப் பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் தேவையான மறுசீரமைப்புக்களுடன் விரிவான பொருளாதார நிலைபேறு மற்றும் மீட்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்காக அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொருளாதார கட்டுப்பாடு பரிமாற்றம், வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு மற்றும் வறுமைப்பட்டவர்கள் மற்றும் இடர்களுக்கு உள்ளாகியவர்களைப் பாதுகாத்தல் போன்ற பிரதான 03 துறைகளின் அடிப்படையில் உலக வங்கி தனது ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு செயன்முறையை ஜனாதிபதி செயலகத்தால் மேற்கொள்வதற்கும், குறித்த நிதியொதுக்கீடு பற்றி உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்குவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நிதித்துறைப் பாதுகாப்பு வலையமைப்புக் கருத்திட்டத்திற்கான உலக வங்கி நிதியைப் பெற்றுக்கொள்ளல்

நிதித்துறைப் பாதுகாப்பு வலையமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவி நிதிக்காக உலக வங்கியின் கடன்வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. நிலைபேற்றுத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் ஆரோக்கியமான நிதி இடைநிலை முறைமையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில் நிதித்துறையின் பலம் மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் வைப்புக் காப்புறுதி உத்தேச முறைமையை இலக்காகக் கொண்டு இலங்கை நிதித்துறைப் பாதுகாப்பு வலையமைப்பின் நிதி மற்றும் நிறுவன ரீதியான இயலளவை வலுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள கடன்தொகையை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, முதலீட்டுக் கருத்திட்ட நிதியிடலாக 150 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் உலக வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

07. பொருளாதார நிலைபேற்று வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன்வசதியைப் பெற்றுக்கொள்ளல்

சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதிகளுக்கு இணையாக இலங்கையின் நிலைபேற்றுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியால் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன்வசதி மற்றும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொழிநுட்ப உதவித் தொகையை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கடன்தொகையை பெற்றுக்கொள்வதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

கீழ்க்காணும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்ஃவிதிமுறைகள்ஃஒழுங்குவிதிகள்ஃஅறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :

• 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறிவீட்டுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2312/67 ஆம் இலக்க 2022.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்.
• 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2312/73 ஆம் இலக்க 2022.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை.
• (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 2312/70 ஆம் இலக்க 2022.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 07/2022 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்.
• 1999 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க புகையிலை வரிச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2312/71 ஆம் இலக்க 2022.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்.
• 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2312/68 ஆம் இலக்க 2022.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்.
• 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2309/37 ஆம் இலக்க 2022.12.09 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் மற்றும் 2314/16 ஆம் இலக்க மற்றும் 2023.01.11 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்.
• 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2312/80 ஆம் இலக்க 2023.01.01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்.
• 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2312/69 ஆம் இலக்க 2022.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்கள் மற்றும் 2318/53 ஆம் இலக்க மற்றும் 2023.02.10 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்கள்.
• 2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2316/32 ஆம் இலக்க 2023.01.26 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்.

09. புதிய தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரித்தல்

நாட்டின் பொருளாதார நிலைபேற்றுத்தன்மையை அடையும் செயன்முறையில் துரிதமாக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசு அடையாளங் கண்டுள்ளது. அதற்கமைய, குறித்த அனைத்துப் பங்கீடுபாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் புதிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்கான தேசியக் கல்விக் கொள்கைச்சட்டகம் மற்றும் ஏற்புடைய அனைத்து மறுசீரமைப்புக்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மற்றும் கௌரவ பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் 10 உறுப்பினர்களுடன் கூடிய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டமூலம்

பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.12.05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 5 =

Back to top button
error: