சர்வதேச தொழிலாளர் தினம் ‘மே தினம்’ இன்று (01) சர்வேதேச ரீதியாக கொண்டாடப்படுவதுடன் இலங்கையிலும் இன்று ‘மே தினம்’ கொண்டாடப்படுகிறது
மே தினத்தை முன்னிட்டு இலங்கையின் முன்னணி அரசியல் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டம், கொழும்பு மற்றும் கண்டி நகரங்களை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெறவுள்ளது. கொழும்பு B.R.C.மைதானத்திலிருந்து இன்று (01) பிற்பகல் 03 மணிக்கு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வரை பயணிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் இன்று (01) பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் மே தினக் கூட்டம் இன்று (01) பிற்பகல் 2 மணிக்கு கண்டியில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலவை இலங்கை கூட்டணியின் மே தினக்கூட்டம், இன்று (01) பிற்பகல் 03 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் விமல் வீரவங்ச கூறினார்.
‘நாட்டை விற்கும் மக்களை துன்புறுத்தும் ஊழல் மிக்க ஆட்சியை தோற்கடிப்போம், மக்கள் நேயமுள்ள ஆட்சியை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி கண்டி பொதுச்சந்தை வளாகத்தில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் திசர குணசிங்க கூறினார்.
முன்னிலை சோசலிசக் கட்சி நுகேகொடையில் இன்று மே தினக்கூட்டத்தை நடத்தவுள்ளது. தமது கட்சியின் மே தினப் பேரணி இன்று (01) பிற்பகல் 01 மணிக்கு தெல்கந்த சந்தியில் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட குறிப்பிட்டார்.
கொழும்பு மற்றும் கண்டி நகரங்களை அண்மித்த பகுதிகளில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
137 வருடங்களுக்கு முன்னர் தொழிலாளர் உரிமைகளுக்காக மாபெரும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது