
பாராளுமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக 9 ஆம் திகதி மாத்திரம் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மே 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் செஸ் வரி தொடர்பான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 8 கட்டளைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 3 ஒழுங்குவிதிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்தை அடுத்து அனுமதிக்கப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறும்.
மே 10 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
மே 11 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதனையடுத்து தனியார் உறுப்பினர் சட்டமூலமான ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் 2328/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, ‘அஷ்வசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.