பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட குஷானி ரோஹணதீர அவர்கள் நேற்று (23) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய பதவியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக் காலை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ரோஹனதீர அவர்களை, பாராளுமன்ற உதவிச் செயலாளர்களான டிக்கிரி கே.ஜயதிலக மற்றும் ஹங்ச அபேரத்ன ஆகியோர் வரவேற்றனர்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் புதிய செயலாளர் நாயகம் பதவிச் சத்தியம் செய்துகொண்டதுடன், மகா சங்கத்தினர் ஆசீர்வதித்து மத அனுஷ்டானங்களை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்படவுள்ள ரத்தனதிஸ்ஸ அறக்கட்டளை (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் உண்மைப் பிரதியில் கையொப்பமிட்டு அவர் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, குஷானி ரோஹணதீரவின் குடும்ப உறுப்பினர்கள், பாராளுமன்றத் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தனர்.
இன்று மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது படைக்கலசேவிதர் முன்செல்ல சபாநாயகர், செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலாளர்கள் குழுவினர் சபா மண்டபத்துக்குள் வருகை தந்தனர்.
பின்னர், அரசியலமைப்பின் 65(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ சனாதிபதி அவர்களால் பாராளுமன்ற பணியாட்டொகுதிப் பிரதானியாகவும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமாக பதவி வகித்த திருமதி குஷானி அனூஷா ரோஹணதீர அவர்கள் 2023 மே 23 ஆம் திகதி முதல் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றச் செயலாளர் நாயகமாக பதவி வகித்த தம்மிக தசநாயக்க அவர்கள் 2023 மே 23 ஆம் திகதி முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதையும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை அம்பலாங்கொட தர்மாஷோக்க கல்லூரியில் பூர்த்தி செய்த இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத்தில் இளவிஞ்ஞானமானிப் பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் சட்டத்தரணியுமாவார்.
பாராளுமன்றத்தில் தனது சேவையை 1999ஆம் ஆண்டு ஆரம்பித்த இவர், தற்போதைய நியமனத்தைப் பெறுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் பல்வேறு அலுவலகங்களில் உதவிப் பிரதான உத்தியோகத்தர், பிரதிப் பிரதான உத்தியோகத்தர், உதவிச் செயலாளர் நாயகம், பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
பாராளுமன்ற சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்னர் சம்பத் வங்கியின் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரியாகவும், என்வயர்ன்ட்மென்டல் பவுன்டேஷன் நிறுவனத்தில் கனிஷ்ட விஞ்ஞானியாகவும், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரின் (தொலைதூரக் கல்வி) செயலாளராகவும், இன்போமட்டிக்ஸ் தனியார் நிறுவனத்தின் நிலைய இணைப்பாளராகவும் தனியார் துறையில் பணியாற்றியுள்ளார்.
இவர் இந்திய லோக்சபாவின் பாராளுமன்ற கற்கைகள் மற்றும் பயிற்சிகள் நிறுவகம், கடனாவின் மொன்ரியல் மக்கில் பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவங்களில் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள், சட்டவாக்கம் உள்ளிட்ட விடயங்களில் விரிவான பயிற்சியைப் பெற்றுள்ளார்.
சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹணதீரவை மணந்துள்ள அவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.