திருகோணமலை அலெஸ்தோட்ட கரையோரப்பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதி
திருகோணமலை அலெஸ்தோட்டம் கரையோரப்பகுதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நேற்று (27) நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தூய்மைப்படுத்தல் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்.
“கிழக்கு மாகாணத்தின் கடற்கரைகளை ஆசியக்கண்டத்தின் அழகான மற்றும் தூய்மையானதோர் கடற்கரைகளாக மாற்றுதல்” எனும் எண்ணக்கருவில் இவ் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
திருகோணமலை சுற்றுலா பிரசித்தி பெற்ற நகரமாக காணப்படுகின்றது. கரையோரப்பிரதேசங்களை தூய்மைப்படுத்தி ரம்மியமான முறையில் வைத்திருக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் இவ் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இனி வரும் காலங்களில் இரண்டு நாள் அல்லது மூன்று நாளுக்கு ஒரு தடவை கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும். சரியாக மூன்று மாதத்தில் இலங்கையிலேயே சுத்தமான கடற்கரை எது என்றால் அது கிழக்கு மாகாண கடற்கரை என்ற பெயரை ஏற்படுத்துவதுடன் அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களாகிய உங்கள் கைகளில் தான் அவ்விடயம் உள்ளது. அவ்வாறு செய்யும்போது இலங்கைக்கு வருகின்ற அத்தனை சுற்றுலா பயணிகளும் இங்கே வருவார்கள். இது ஒரு சமூகப் பொறுப்பாகும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்தார்.
கடற்கரையை சுத்தமாக பாதுகாப்பக்கூடிய hotline இலக்கம் மற்றும் whatsapp குழுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடற்கரையில் குப்பைகள் அகற்றப்படாமல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் அனுப்பலாம். உடனடியாக ஒரு குழு வந்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவன்னன், திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பார்த்திபன், அரச அதிகாரிகள்,பாடசாலை மாணவர்கள், சிவில் அமைப்பினுடைய பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.