சுவாமி விபுலானந்த அடிகளாரின் 76 வது சிரார்த்த தின நிகழ்வு
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 76 வது சிரார்த்த தின நிகழ்வுகள் நேற்று (19) மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு – கல்லடி உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள உலகின் முதற்தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதியில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
சுவாமியின் திருவுருவத்தை தாங்கிய ஊர்வலமானது மணி மண்டப வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதிவழியாக நாவற்குடாவை அடைந்து அங்கிருந்து பழைய கல்முனை வீதி வழியாக கல்லடி மணிக்கூட்டுக்கோபுரத்தை அடைந்து மீண்டும் சிவானந்தா வித்தியாலயத்தை வந்தடைந்ததும் சுவாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா மஹராச், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் சிவானந்தா வித்தியாலயம் மற்றும் விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றின் அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.