சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் பதவியிலிருந்து நீக்கம்
பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யி நியமணம்
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் (57) பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஜூன் 25ஆம் திகதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவும் இல்லை.
கின் கேங் இருப்பிடம் தொடர்பான எந்தத் தகவல்களையும் இதுவரை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளிப்படையாக வெளியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து ‘எங்கே கின் கேங்?’ என்று சர்வதேச ஊடகங்களும், சீன மக்களும் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், சீன அமைச்சரவையிலிருந்து கின் கேங் நீக்கப்பட்டிருக்கிறார். சீன வெளியுறவு அமைச்சராக பதவியேற்று 7 மாதங்களே ஆன நிலையில், கின் நீக்கப்பட்டிருக்கிறார். கின் கேங்குக்கு பதிலாக வாங் யி வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.