இந்தியா – ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கலவரம்
இந்தியா – ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று (31) நடந்த மத ஊர்வலம் கலவரத்தில் முடிந்த நிலையில், அது தற்போது அருகிலுள்ள குருகிராமின் பாட்ஷாபூருக்கும் பரவியுள்ளது.
ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
“இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்,” என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் பிபிசியிடம் கூறினார். குருகிராமின் டிசிபி(கிழக்கு) நிதீஷ் அகர்வால், இந்த தாக்குதலை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
“மசூதியின் நாயப் இமாம் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
“மசூதி தாக்கப்பட்ட நேரத்தில் போலீஸ் படைகள் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை போலீசார் சேகரித்துவருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று டிசிபி மேலும் கூறினார்.
முன்னதாக திங்களன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள மேவாத் பகுதியில் சமய யாத்திரையின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் காயமடைந்தனர் மற்றும் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.(நன்றி – பிபிசி)