(எம்.எஸ். எம்.ஸாகிர்)
லண்டன் பிபிசியின் தமிழோசை மற்றும் இலங்கை வானொலி உட்பட பல புலம்பெயர் தனியார் தமிழ் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்த மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் திடீர் மறைவு தமிழ் பேசும் நல்லுலகுக்கு பாரிய இழப்பாகும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரத்தின் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 79 ஆவது வயதில் லண்டனில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் காலமான செய்தி அறிந்து நாம் அதிர்ச்சியடைந்தோம்.
இலங்கை வானொலி மற்றும் பிபிசி தமிழோசை மூலமாக அவர் உலகெங்கும் வாழும் தமிழ் நேயர்களின் பேரபிமானத்தை வென்றிருந்தார்.
ஒரு சட்டத்தரணியான இவர் பகுதி நேரமாகவும் முழுநேரமாகவும் சுமார் 6 தசாப்தங்களுக்கு மேலாக ஒலிபரப்புத்துறையில் பணியாற்றியுள்ளமை அவரது திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் தக்க சான்றாகும்.
இலங்கை வானொலியில் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிவந்த விமல் சொக்கநாதனுக்கு பிபிசியில் செய்தி ஒலிபரப்புப்பணி் வழங்கப்பட்டது. இங்கு சிறந்த அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தனது சக ஒலிபரப்பாளர்களால் அவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.
தற்போதைய இளம் ஒலிபரப்பாளர்களுக்கு விமல் சொக்கநாதனின் ஒலிபரப்பு வாழ்வில் கற்பதற்கு நிறைய பாடங்களும் முன்மாதிரிகளும் உள்ளன என்றால் அது மிகையாகாது.
அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த அவர், தான் பத்திரிகைகளில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள் இரண்டை வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் எம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்.
அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினர், சக ஒலிபரப்பாளர்கள், நேயர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.