விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்து, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகளை அடையாளங் கண்டு, அவர்களின் திறமைகளை மேம்படுத்தத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.