புதிதாக சிந்தித்து, புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லாவிட்டால், இன்னும் 10 வருடங்களில் நாடு மற்றொரு பொருளாதார சவாலை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
மாத்தளை புனித தோமஸ் ஆண்கள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழாவில் இன்று (13) கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துத் துறைகளையும் நவீனமயமாக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தனது எதிர்பார்ப்பு என்றும், அதற்கு அவசியமான தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்ள, தொழில்நுட்ப ஊக்குவிப்பு சபை மற்றும் நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்த டிஜிட்டல் மாற்ற ஆணைக்குழு ஆகியவற்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதமராக இருந்த விஜயாநந்த தஹநாயக்கவுக்குப் பின்னர், மாத்தளை புனித தோமஸ் கல்லூரிக்கு முதல் தடவையாக விஜயம் செய்யும் அரச தலைவராக இன்று காலை கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிறுவப்பட்டுள்ள நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், பழைய மாணவர் சங்கத்துடன் குழு புகைப்படத்திற்கும் இணைந்துகொண்டார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.