உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்தாலோசித்து, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான அறிக்கையைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் (17) நடந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண சபை முறைமையுடன் எதிர்கால நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் தொடர்புள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கெடுத்திருந்தனர்.