உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே உயர்ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக பரிமாற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கிவரும் ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கௌரவ (கலாநிதி) எஸ். ஜெயசங்கர் வீடியோ செய்தி மூலம், இந்நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
இதன்போது இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அங்கத்துவ உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.