உள்ளூராட்சி மன்றங்கள் கணக்காய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், குறித்த நிறுவனங்களினால் ஈட்டப்படும் நிதி இதுவரை கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லையென அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இதற்கமைய கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத பிரிவுகளை கணக்காய்வுக்கு உட்படுத்துவது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம் செலுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
2019/2020 ஆம் ஆண்டுகளில் திருப்திகரமான செயல்திறன் மட்டத்தை அடைந்த அரசாங்க நிறுவனங்களைக் கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே கோபா குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2004ஆம் ஆண்டு தான் பாராளுமன்றத்துக்கு வந்தபோது சில அரசாங்க நிறுவனங்களின் 1980ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும், இந்தக் குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக இதுவரை பல்வேறு நிறுவனங்கள் உரிய முறையில் செயற்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச நிதி நிறுவனங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன குறிப்பிட்டார். அரசாங்கப் பொறிமுறை மற்றும் அரசியல் பொறிமுறை என்பன இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதிலிருந்து மீள்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுது்துவதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மேலும் தமது நிறுவனங்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
2019/2020 ஆண்டுகளில், திருப்திகமான செயற்திறனை வெளிப்படுத்தி அதிக மதிப்பெண்களைப் பெற்ற அரசாங்க நிறுவனங்களை கௌரவித்து 113 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேல்மாகாணத்தில் உள்ள 45 அரச நிறுவனங்களுக்கு கோபா குழுவின் தலைவர் மற்றும் குழுவின் உறுப்பினர்களால் நேரடியாக சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது
மேல் மாகாணத்துக்கு வெளியேயுள்ள 60 அரசாங்க நிறுவனங்களுக்கு மெய்நிகர் முறையின் ஊடாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌவர லசந்த அழகியவண்ண, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ ஜே.சி.அலுவத்துவல, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் செயலாளர் சிந்தா புலத்சிங்கள உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.