நாட்டின் அனைத்து மக்களினதும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்காக சமூக நீர் வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் குடிநீர்த் தேவையில் 62% சதவீதத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மொத்த குடி நீர்த் தேவையில் 85% சதவீத நீர் வழங்கல் இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தடையின்றி தொடர்ச்சியான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் நீர்க் கட்டணத்தை அதிகரிக்க, கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாகவும், மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஓரளவு நிவாரணம் கிடைக்குமெனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வலியுறுத்தினார்.