crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் குழுவினர் சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் நீதிமன்றம், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அழுத்தம் ஏற்படுவது சட்டத்தரணிகள் சங்கத்தினால் அவதானிக்கப்பட்டிருப்பதாக நவரத்ன இங்கு சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தற்பொழுது சேவையாற்றிவரும் நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும், இது விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலையைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், இது குறித்த எழுத்துமூல கோரிக்கையையும் சபாநாயகரிடம் கையளித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு தான் தொடர்ந்தும் செயற்படுவதாகக் குறிப்பிட்டார். எனவே, எதிர்காலத்தில் இது தொடர்பில் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்க எதிர்பார்த்திருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் நளிந்த இந்திரதிஸ்ஸ, செயலாளர் சட்டத்தரணி இசுரு பாலபட்டபெந்தி, பொருளாளர் சட்டத்தரணி சமத் ஜயசேகர, உதவிச் செயலாளர் சட்டத்தரணி மெஹ்ரான் கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 + = 43

Back to top button
error: