உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .
கியூபாவின் ஹவானா நகரில் நேற்று (15) ஆரம்பமான “G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார் .
கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸ் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியதுடன், மாநாடு தொடங்கும் முன், இதில் பங்கேற்ற அனைத்து அரச தலைவர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த மாநாட்டை கூட்டியது குறித்து கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸை (Miguel Diaz-Canel Bermudez) பாராட்டி தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி, பல்வேறு பலதரப்பு அமைப்புகளில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் கியூபா ஆற்றியுள்ள வரலாற்றுப் பங்கை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“தொற்றுநோய்கள், காலநிலை மாற்றங்கள், உணவு, உரம் மற்றும் வலுசக்தி நெருக்கடிகள் போன்றவை, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. அதேபோன்று, அந்த நிலைமையை, உலகளாவிய கடன் நெருக்கடி மேலும், அதிகரிக்கச்செய்வதுடன், அதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலை, உலகளாவிய ரீதியில் தெற்கு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
15 ஆம் நூற்றாண்டில் துப்பாக்கி குண்டுகள், பீரங்கிகள் மற்றும் கடல் பயணக் கப்பல்கள் போன்ற துறைகள் மூலம் ஐரோப்பா அடைந்த முன்னேற்றங்கள் காரணமாக, அவற்றுக்கு உலகின் பிற நாடுகளைக் கைப்பற்ற முடிந்தது. அதன் விளைவாக, உலகில் இன்று தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன.
அதிக செலவு காரணமாக, சில தொழில்நுட்ப முறைகளுக்கு பிரவேசிப்பதற்குள்ள வரையறைகள், போதுமான டிஜிட்டல் திறன்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கலாசார மற்றும் நிறுவன ரீதியில் நிலவும் தடைகள் மற்றும் நிதி தொடர்பான தடைகள் போன்ற சவாலான சூழ்நிலைகள் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தது என்பதே எமது நம்பிக்கையாகும்.
21ஆம் நூற்றாண்டில் இந்தப் புதிய தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளது. அந்த இடைவெளியைக் நிரப்புவதற்காக, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Big Data, Internet of Things (IoT), செயற்கை நுண்ணறிவு (AI), Blockchain, உயிரியல் தொழில்நுட்பவியல் (Biotechnology) மற்றும் மரபணு வரிசைமுறை (Genome Sequencing) போன்ற புதிய தொழில்நுட்பங்களை நோக்கி நாம் விரைவாக செல்ல வேண்டியது அவசியமாகும்.
அபிவிருத்திப் பொறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செயல்முறையை இலகுபடுத்துவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும், அந்தச் செயல்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு, அதற்குத் தேவையான அறிவு மற்றும் முழுமையான தொழில்நுட்பத்துடன், கற்ற தொழிற்படையும் இருக்க வேண்டும்.
தற்போது குறைந்த செயற்திறனுள்ள விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மதிப்பீடுகளைச் செய்வதற்கும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சபையொன்றையும், டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனமொன்றையும் நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பிரதிபலனாக, புதிய தொழில்நுட்பவியலுக்காகவே விசேடமான நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் இலங்கை திட்டமிட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்றம் குறித்த உத்தேச சர்வதேச பல்கலைக்கழகத்தை அதில் ஐந்தாவதாக ஸ்தாபிப்பதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
“G77 + சீனா” குழுவில் செயற்திறன் மிக்க ஒத்துழைப்பு பொறிமுறை ஒன்றும் தேவை. உலகளாவிய தெற்கிற்கான விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுக்கான ஒன்றிணைவு (COSTIS) புத்துயிர் பெறச்செய்வதற்கு அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக ஒரு தசாப்தமாக அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஒதுக்குவதன் மூலம், உறுப்பு நாடுகள் சில அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்க விரும்புகின்றேன்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையைப் பின்பற்றி, டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில், தொழில்நுட்பத் தளங்களை உருவாக்குவதற்கு அரச துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டும் ஒத்துழைப்புடன் செயற்படுவது மிகவும் முக்கியமாகும்.
உலகளாவிய ரீதியில் தெற்கிலிருந்து வடக்கிற்கு இடம்பெறும் நுண்ணறிவு ஓட்டத்தின் பிரதிபலனாக கல்வி கற்ற தொழிற்படை இழப்பு, தெற்கின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளின் வளர்ச்சிக்கு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் அவர்களின் தொழிற்படைப் பலத்தை மேம்படுத்தி, அதன் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் முன்னேற்றியுள்ளது. அதன் காரணமாக உலகில் தெற்கு என்ற ரீதியில் நமது கற்ற தொழிற் படை இழப்புக்காக, உலகின் வடக்கில் இருந்த இழப்பீடு கோரப்பட வேண்டும்.
உலகளாவிய ரீதியில், தெற்கு நாடுகளுக்கு இடையில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஒத்துழைப்பை மேம்படுத்தல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், மற்றும் விஞ்ஞானம், தொழிநுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றின் ஆற்றல்களைப் பயன்படுத்தக் கூடிய கொள்கைகளை மேம்படுத்துவதற்கு கொழும்புத் திட்டத்தைப் போன்ற ஒரு திட்டத்தை உருவாக்குவது குறித்தும் நான் இங்கு பரிந்துரைக்கின்றேன்.
புதிய ஹவானா பிரகடனத்தை ஆதரிப்பதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்த வேண்டும். “G77 + சீனா” அரச தலைவர்களின் உச்சிமாநாட்டின் கூட்டுக் குரல், சர்வதேச ரீதியில் ஒலிக்கச் செய்ய ஒன்றிணையுமாறும் நான் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்”.என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .