ஆப்பிரிக்காவில் 10 குழந்தைகள் பெற்றதாக கூறப்பட்ட பெண்? சர்ச்சை
தென் ஆப்பிரிக்காவில் பத்து குழந்தைகள் பெற்றெடுத்து உலக சாதனை நிகழ்த்தியதாக கூறப்பட்ட பெண் தற்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டெபோகோ சொடேட்ஸி – கோஸியாமே தமாரா தம்பதி. 7 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 6 வயதில் ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்படைந்த கோஸியாமே ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார். இவற்றில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் ஆவர். தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக அவரது கணவர் டெபோகோ தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, மாலி நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று உலக சாதனை படைத்தார். தற்போது இந்த சாதனையை கோஸியாமே முறியடித்திருக்கிறார் என்றெல்லாம் செய்தி வெளியானது.
இந்த நிலையில் கோஸியாமேவுக்கு 10 குழந்தைகள் பிறக்கவில்லை என்றும். இது ஒரு பொய் செய்தி என்றும் தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குழந்தைகள் பிறந்ததாக கூறப்பபடும் மருத்துவமனையும் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.
கோஸியாமேவுக்கு குழந்தைகள் பிறந்ததற்கான எந்த தடயமும் இல்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து போலீஸ் வாயிலாக கோஸியாமே மன நல சிகிச்சைக்காக டெம்பிசா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு கோஸியாமே ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் கோஸியாமேவின் உறவினர்களும், சில சமூக ஆர்வலர்களும் அவர் 10 குழந்தைகளை பெற்றெடுத்தது உண்மைதான், ஆனால் குழந்தைகள் எங்கே என்று தெரியவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோஸியாமேவுக்கு உண்மையில் குழந்தை பிறந்ததா? அவ்வாறு பிறந்திருந்தால் அக்குழந்தைகள் எங்கே? என்ற கேள்வி தென் ஆப்பிரிக்காவில் பேசும் பொருளாகி உள்ளது.(இந்து)