crossorigin="anonymous">
உள்நாடுபொது

தொழில்ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்க பயிற்சி நிறுவனம் தொடர்பில் கவனம்

அரச நிறுவனங்களிடமிருந்து சரியான தகவல்களை விரைவாகப் பெற இயலாமை மக்களுக்குச் சரியான செய்திகளைக் கொண்டு செல்வதற்குப் பிரதான தடையாக உள்ளது – வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் ஊடகத் தலைவர்கள் தெரிவிப்பு

ஊடக அறிக்கையிடலின்போது அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களிடமிருந்து சரியான தகவல்களை விரைவாகப் பெற இயலாமை செய்திகளை அறிக்கையிடுவதில் பிரதான தடையாக உள்ளதாக ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் 2023.09.15 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கருத்துத் தெரிவித்தனர்.

விசேடமாக ஒரு சில ஊடக செயலாளர்கள் அந்த ஒருங்கிணைப்பை முறையாக செய்யாமை காரணமாக அரசாங்கத்தின் சிறந்த அபிவிருத்தித்திட்டங்களும் மக்களுக்கு சென்றடைவதில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஜயசுந்தரவுக்கு குழு பரிந்துரைத்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி தலைமையில் 2023.09.15 ஆம் திகதி இந்தக் குழு கூடிய போது இவ்விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்றில் சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு ஊடக நிறுவனங்களின் தலைவர்களின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெறுவதற்கு இந்தக் குழு கூடியதுடன், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

ஜனநாயகம் சிறந்த முறையில் செயற்படுவதற்கு ஊடகங்கள் மேற்கொள்ளும் பணிகளைப் பாராட்டிய குழுவின் தலைவர், சமூகத்தின் முன்னோடியான ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் காணப்படும் சிக்கல்கள் மற்றும் தடைகளை தீர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு இந்தக் குழுவினால் தேவையான பரிந்துரைகளையும் முழுமையான ஆதரவையும் வழங்குவதாகச் சுட்டிக்காட்டினார்.

தொழில்ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்குப் பயிற்சி நிறுவனமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் தற்பொழுது சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக செயலாளர் குறிப்பிட்டார்.

அந்தப் பணியை தாமதிக்காமல் விரைவாக செயற்படுத்துமாறு குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், வெகுஜன ஊடகக் கொள்கையொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்று இருப்பதாகவும், அதற்கு கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைக்குமாறு ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக செயலாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், அச்சு ஊடகங்கள் முகங்கொடுக்கும் சிக்கலான நிலைமையில் மை, தாள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏதாவதொரு சலுகையை அரசாங்கத்தினால் வழங்குவதற்கான இயலுமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரச இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தற்பொழுது திறைசேரியில் தங்கியிருக்காமல் சுய வருமானம் ஈட்டுவதனால், ஊடக அறிக்கையிடல்களை இலவசமாக செய்வதில் காணப்படும் சிரமங்கள் தொடர்பில் அரச ஊடகங்களின் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

அரச ஊடகங்களில் இலவசமாக பிரச்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிழையான கருத்தொன்று உருவாகியுள்ளதாகவும், தொடர்ந்து அவ்வாறு மேற்கொண்டு இந்த நிறுவனங்களை நடாத்திச் செல்ல முடியாது என்பதால் இது தொடர்பில் தலையிடுவதன் அவசியம் தொடர்பிலும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இது தொடர்பில் பரிந்துரைகளை மேற்கொள்ள குழு தலையிடுவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

குற்றவியல் அறிக்கையிடல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் குற்றங்களை அறிக்கையிடும் போது அவை ஊடக நெறிமுறைகளுக்கு அமைய அறிக்கையிடுவதன் அவசிய தொடர்பில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், ஊடக அலைவரிசைகளை தரவரிசைப்படுத்துவதற்கு வெளிப்படையான, சுயாதீன நிறுவனமொன்றை உருவாக்குதல், ஊடகவியலாளர்களின் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குதல், ஊடகவியலாளர்களின் தடைகளின்றி அறிக்கையிடும் உரிமையை உறுதிப்படுத்தல், போலித் தகவல்கள் தொடர்பான சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தல், ஊடக அனுமதிப்பத்திரம் வழங்குவதில் காணப்படும் சட்டத்தைத் திருத்துவதன் அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, இது தொடர்பான பரிந்துரைகளைப் பாராளுமன்றம் ஊடாக அரசாங்கத்துக்கு முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகக் குழுவின் தலைவர் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) ஜயந்த வீரசிங்கவும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: