ஏற்றுமதியாளர்களும் உற்பத்தியாளர்களும் ஒருவரையொருவர் எளிதாகவும் விரைவாகவும் இணைக்கும் ஒரே ஊடகம் டிஜிட்டல் ஊடகமும் தொழில்நுட்பமும் மட்டுமே என்றாலும், தற்போதைய நிலவரப்படி, சமூக ஊடகத்துறைக்கு அரசாங்கம் மரண அடியைக் கொடுத்து சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்றும்,நிகழ் நிலை பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறி சமூக ஊடகங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்து மக்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (23) தெரிவித்தார்.
பெலிதெனிய பிரதேசத்தில் நகை ஆபரணங்களை உருவாக்கும் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சமூக ஊடக பரப்பில் வரிக்கு மேல் வரி பிறப்பிக்கப்பட்டதால், வரிச்சுமையால் பல சமூக ஊடக அடிப்படையிலான தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் நிலவுவதாகவும், நாட்டின் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கும், டொலர்களை ஈட்டுவதற்கும் பதிலாக,அரசாங்கம் பெரும்பாலும் நாட்டின் தொழில்களை அழிக்கும் வேலைத்திட்டத்திலே உள்ளதாகவும்,சமூக ஊடக கட்டுப்பாடுகள் மூலம் கிடைக்கும் சில டொலர்கள் கூட இதனால் இழக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் என்பது நாட்டின் 220 இலட்சம் குடிமக்களும் அனுபவிக்கும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படை உரிமையாகும் என்றும், அதனைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.