இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் உத்தேச ஒன்லைன் முறைமையை பாதுகாத்தல் தொடர்பான சட்டமூலம் ஆகியவற்றை, உடனடியாக விலக்கிக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி ஏகமனதாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
மேற்படி இரண்டு சட்டமூலங்களும் மனித சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்ட ஆதிபத்தியத்துக்கு பெரும் பாதிப்பாக அமைவதாகவும் அது நிறைவேற்றப்படக் கூடாதென்றும் அந்த சங்கம் கேட்டுள்ளது.
சமூகத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய மேற்படி இரண்டு சட்டமூலங்களுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர், அந்த இரண்டு சட்டமூலங்களின் உள்ளடக்கங்களும் சட்டமாக கொண்டுவரப்படுமானால் நாட்டு மக்களின் உரிமைகள் முழுமையாக பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விரண்டு சட்டமூலங்களையும் சட்டங்களாக கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாமென்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது