2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜேர்மனியின் பேர்லின் நகரில் நேற்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.