களுத்துறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 22 ஆண்டு பூர்த்தி விழா
(ஐ. ஏ. காதிர் கான்)
களுத்துறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 22 ஆவது ஆண்டு பூர்த்தியும் பரிசளிப்பு விழாவும், பாணந்துறை – அம்பலந்துவை, ஜாமிஉல் கைராத் அஹதிய்யா பாடசாலை ஏற்பாட்டில், களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் எம்.எம்.எம். உவைன் தலைமையில், அம்பலந்துவை – இல்மா முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கருத்துத் தெரிவிக்கும்போது, “இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களில் உயர் கல்விக்கெனத் தெரிவாகும் மாணவிகளது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உயர் கல்வி கற்கும் விடயத்தில் மாணவர்களது பங்களிப்பையும் அஹதிய்யா மத்திய சம்மேளனம் ஊக்கப்படுத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
இச்சிறப்பு நிகழ்வில், மத விவகார மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மர்ஜான் பளீல், மலேஷியா நாட்டின் உயர் ஸ்தானிகர் பதி ஹஷாம் அடம், களுத்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். இல்யாஸ் தாஹா, அம்பலந்துவை இல்மா முஸ்லிம் வித்தியாலய அதிபரும் ஜாமி – உல் கைராத் ஜும்ஆப் பள்ளிவாசல் செயலாளருமான எம். றிஸ்மி மஹ்ரூப் மற்றும் அஹதிய்யா மத்திய சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக், பிரதித் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அஸ்வர்,
களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளன செயலாளர் ஹிசான் சுஹைல், அம்பலந்துவை அஹதிய்யா பாடசாலை தலைவர் எம்.பீ.எம். கௌஸ், அஹதிய்யா அதிபர் எம்.ஜே.எப். ஷாமிளா, அம்பலந்துவை அஹதிய்யா பாடசாலை கமிட்டிக்குழு உறுப்பினரும் தொட்டவத்தை அல் – பஹ்ரியா தேசிய பாடசாலை ஆசிரியருமான எம். சிஹான் மஹ்ரூப் உள்ளிட்ட மதத் தலைவர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
கலை கலாசார மேடை நிகழ்ச்சிகள் பல இடம்பெற்ற இவ்வழகிய சிறப்பு நிகழ்வில், களுத்துறை மாவட்டத்திலுள்ள 13 க்கும் மேற்பட்ட அஹதிய்யா பாடசாலை மாணவ மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.