18 வீதத்தில் இருந்து 20% வரையான மின் கட்டண அதிகரிப்பை இன்று (20) முதல் மேற்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26 ஆம் திகதி இலங்கை மின்சார சபை மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்ததாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பூச்சியத்திலிருந்து 30 வரையான அலகுக்கு இதுவரை அறவிடப்பட்ட கட்டணம் 10 ரூபாவிலிருந்து 12 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 150 ரூபாவாக காணப்பட்ட நிலையான கட்டணம் 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையான அலகுக்கு அறவிடப்பட்ட கட்டணம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான கட்டணம் 300 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான அலகுக்கான 35 ரூபாவாக அறவிடப்பட்ட கட்டணம் 41 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான நிலையான கட்டணம் 400 ரூபாவிலிருந்து 480 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 வரையான அலகுக்கு இதுவரை அறவிடப்பட்ட 50 ரூபா கட்டணம் 59 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிலையான கட்டணம் 1000 ரூபாவில் இருந்து 1180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
121 முதல் 180 வரையான அலகுக்கு அறவிடப்பட்ட 50 ரூபா கட்டணம் 59 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான நிலையான கட்டணம் 1500 ரூபாவில் இருந்து 1770 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
181 அலகுக்கு இதுவரை அறவிடப்பட்ட 75 ரூபா கட்டணம், இன்று முதல் 89 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான கட்டணம் 2000 ரூபாவில் இருந்து 2360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.