இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக கிடைக்கவேண்டிய வருமானத்தில் 5800 கோடி ரூபா இழக்கப்பட்டுள்ளதாக முறைமை மற்றும் நியதிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேற்படி இழக்கப்பட்டுள்ள நிதியை மீள அறவிடும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த தெரிவுக் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நிதியமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
சுங்கத்திணைக்களத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் அதனூடாக திறைசேரிக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஆகியவை எவ்வாறு கிடைக்காமல் போனது என்பது தொடர்பில் இந்தத் தெரிவுக்குழு, அமர்வின்போது அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதேவேளை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு கொட்டைப்பாக்கு ரூபா 750 – 900 மில்லியனுக்கு இடைப்பட்ட நிதியை செலவிட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதனை, நாட்டில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து பெரும் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவுக்குழுவில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தற்போது அதுபோன்று 1493 மெற்றிக் தொன் கொட்டைப்பாக்கு சுமார் 100 கொள்கலன்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள கொட்டைப்பாக்கு வியாபாரிகளுக்கு இதன்மூலம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குழுவின் அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.