
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்ற “Safe Roads – Safe Children” சர்வதேச மாநாட்டில் நேற்று (01) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் மருத்துவச் சங்கத்தின் (SLMA) வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நிபுணத்துவ குழுவினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீதி விபத்துக்களால் தவிர்க்க முடியாத வகையில் நேரும் சிறுவர் மரணம், வாழ்நாள் முழுவதுமான அங்கவீனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, அதற்காக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளின் பணிகள் தொடர்பிலும் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன.