crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை சபாநாயகர் கொரியா சபாநாயகரைச் சந்திப்பு

கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு திறன்சார் பணியாளர்களை அதிகமாக அனுப்பிவைப்பதற்கும் தேவையான பயிற்சிகளை இலங்கையில் பெற்றுக் கொடுப்பதற்கும், திறன்சார் பணியாளர்களுக்கான ஒதுக்கீடுகளை மேலும் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கொரியாவின் சபாநாயகர் கிம் ஜின் பியோ (Kim Jin-pyo), இலங்கையின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் உறுதியளித்தார்.

கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (03) சியோல் நகரில் அமைந்துள்ள கொரியாவின் சட்டவாக்க சபையான கொரிய தேசிய சபையில் அந்நாட்டு சபாநாயகரைச் சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கை சபாநாயகர் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே கொரிய சபாநாயகர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.

தற்பொழுது 20,00ற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரியாவில் பணியாற்றி வருவதாகவும், திறன்சார் பணியாளர்கள் தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கொரிய சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் ஏறத்தாழ ஐந்து தசாப்தகாலமாக நீடித்து வரும் இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்துவதற்கும் இரு நாட்டு சபாநாயகர்களும் இணங்கினர்.

இந்நாட்டின் கிராமிய விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு கொரியாவில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படும் ஸ்மார்ட் விவசாயத்திட்டத்தை (Smart Farming) இலங்கையில் நிறுவுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கொரியாவில் தற்பொழுது காணப்படும் மேம்பட்ட அரசாங்க சேவைக்குச் சமமான பொதுச் சேவையை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வழிகாட்டல் மற்றும் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இங்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

கொரியாவின் சர்வதேச முகவர் அமைப்பின் ஊடாக (KOICA) இதற்கான பயிற்சியை இந்நாட்டின் பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த நாட்டில் கொரிய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. முதலீடுகளுக்கு சாதகமான சூழலை மேலும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய கொரிய சபாநாயகர், இலங்கையில் கொரிய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்காக இலங்கைக்கு வரும் சில நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் வேலைத்திட்டத்தில் கொரியாவை உள்ளடக்குவது பற்றி எதிர்காலத்தில் பரிசீலித்துப் பார்ப்பதாக சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் கொரியாவின் தேசிய சபையின் உறுப்பினர்களும் இதில் இணைந்துகொண்டிருந்தனர். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நிமல் பியதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, இலங்கைக்கான கொரியாவின் முன்னாள் தூதுவர் சந்துஷ் வொன்ஜின் ஜியோன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − = 30

Back to top button
error: