12 வருட கால பள்ளிவாசல் கடமையை நிறைவு செய்யும் மௌலவி சப்ரிக்கு சன்மானம் வழங்கி கௌரவிப்பு
(ஐ.ஏ. காதிர் கான்)
மினுவாங்கொடை – கல்லொழுவை, ஹஸனிய்யா பள்ளிவாசலில் பிரதம பேஷ் இமாமாகப் பணியாற்றி வந்த மௌலவி எம்.எம்.எம். சப்ரி (நஜ்மி), தனது 12 வருட கால பள்ளிவாசல் கடமையினை நிறைவு செய்து, தனது சொந்த அலுவல் காரணமாக இங்கிருந்து செல்வதை முன்னிட்டு, அவருக்கு பிரியாவிடை வைபவம் ஒன்று, கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசலில், (03) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளிவாசல் ஆயுட்காலத் தலைவர் ஏ.எச்.எம். முனாஸ் ஹாஜியார் இச்சிறப்பு நிகழ்வில் தலைமை வகித்து, பள்ளிவாசல் நிர்வாக சபை சார்பாக மௌலவி சப்ரிக்கு சன்மானம் வழங்கி கௌரவித்தார்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி சப்ரி, ஹஸனிய்யா பள்ளிவாசலில் பிரதம பேஷ் இமாமாக 2011 ஆம் ஆண்டில் இணைந்தார். அதன் பின்னர், இப்பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்து வந்ததுடன், 2019 முதல் அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமாவின் மினுவாங்கொடை கிளையில் இணைந்து செயலாளராகவும் தனது பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ் அரபு மொழிகளைப் போன்று, சிங்கள மொழியிலும் பாண்டித்யம் பெற்று விளங்கும் மௌலவி சப்ரி, கொவிட் 20 (கொரோனா) கால கட்டத்திலும் கூட இப்பிரதேச முஸ்லிம் மக்களுக்கு ஜனாஸா சம்பந்தமான விவகாரங்களில் முன்னின்று, தனது உடலாலும் பொருளாலும் பாரிய அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார். “இச்சேவைகளை, தமது வாழ்நாட்களில் என்றுமே மறக்க முடியாது” என, கல்லொழுவை வாழ் மக்கள் மிகுந்த நன்றி உணர்வோடு அவரை நினைவு கூறி, அவரைப் பாராட்டியுள்ளனர்.
ஜம் – இய்யாவின் மினுவாங்கொடை கிளை உப தலைவர் மௌலவி எச்.எம். ஸமீல் (தீனி) இங்கு குறிப்பிடும்போது, “மௌலவி சப்ரியுடைய சேவைகளும் மார்க்கப் பணிகளும் விசாலமானதாக உள்ளது. இவரது பரந்த மனதை ஊர் மக்கள் சார்பாகப் பாராட்டுகின்றேன்” எனத் தெரிவித்தார்.
மௌலவி சப்ரி தனது நன்றி உரையில், “12 வருட காலமாக தனக்கு ஒத்துழைத்து உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த ஆழ்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டார்.
இறுதியில், மினுவாங்கொடை கிளையின் முன்னாள் தலைவர் மௌலவி எம்.எப்.எம். பாஹிருத்தீன் (தீனி), “மௌலவி சப்ரியின் பயணம் சிறக்க வேண்டும், வாழ்க்கையில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும்” என்றும் துஆப் பிரார்த்தனை புரிந்ததோடு, “பலஸ்தீன மக்களின் துன்பம் துடைக்கப்பட்டு, அவர்களுக்கும் அல்லாஹ் விரைவில் சிறப்பான வெற்றியை நல்குவானாக” என்றும் உளமுறுகிப் பிரார்த்தனை புரிந்தார்.